தமிழ்நாடு

தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார்: திருச்சி கிராப்பட்டியில் அரசு விடுதி மாணவர்கள் திடீர் மறியல்

Published On 2023-11-05 08:34 GMT   |   Update On 2023-11-05 08:34 GMT
  • போலீசார் மாணவர்களை குண்டு கட்டாக அப்புறப்படுத்த முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
  • விடுதி மாணவர்களின் போராட்டத்தினால் திருச்சி-மதுரை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது.

திருச்சி:

திருச்சி கிராப்பட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 120 பேர் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி அவர்கள் பல முறை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக சென்று மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை. விடுதி வார்டனும், துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் இன்று திருச்சி-மதுரை சாலையில் கிராப்பட்டி மேம்பாலத்தில் தங்களுக்கு அளிக்கப்பட்ட மோசமான காலை உணவான இட்லியுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவர்களை குண்டு கட்டாக அப்புறப்படுத்த முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தரமற்ற உணவுகளால் விடுதியில் பயின்ற 3 மாணவர்கள் வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியதாகவும், இதுபோன்று மற்ற மாணவர்களுக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது என்ற நோக்கிலேயே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் மாணவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். பின்னர் மாணவர்கள் இட்லி குண்டாவை தூக்கிக் கொண்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

இதை தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

விடுதி மாணவர்களின் போராட்டத்தினால் திருச்சி-மதுரை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது.

Tags:    

Similar News