கோடை சீசனை முன்னிட்டு ஊட்டியில் இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து மாற்றம்
- கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
- கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுக்கடங்காத சுற்றுலாபயணிகள் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஊட்டி:
கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. விடுமுறை தினங்களில் ஊட்டி உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுக்கடங்காத சுற்றுலாபயணிகள் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 3 மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் வரிசையில் காத்து நின்று சென்றன. இதனால் சுற்றுலாபயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வருகிறது. இதுகுறிதது நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-
ஊட்டியில் இருந்து கோவை- மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக செல்லவும், சமவெளி பகுதிகளில் இருந்து ஊட்டி நோக்கி வரும் வாகனங்கள் பர்லியாறு- குன்னூர் சாலை வழியாக ஊட்டிக்கு வரும் வகையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் அரசு பஸ்களை தவிர கனரக வாகனங்களான தண்ணீர் லாரி, கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நகருக்குள் இயங்க அனுமதியில்லை. ஆட்டோக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை தவிர வேறு இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றினால் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.