தமிழ்நாடு

தமிழக சட்டசபை கூட்டம் நாளை கூடுகிறது- கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்

Published On 2023-01-08 13:42 GMT   |   Update On 2023-01-08 13:42 GMT
  • சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்வார்கள்.
  • கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட உரையை வாசிப்பார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரம் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நடத்துவது மரபாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு நாளை (திங்கட்கிழமை) சட்டசபை கூட்டம் தொடங்க உள்ளது.

முதல் நாள் கவர்னர் ஆர்.என்.ரவி காலை 10 மணிக்கு உரையாற்ற உள்ளார். இதற்காக அவர் காலை 9.30 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு வருவார். 9.50 மணி அளவில் சட்டசபை வளாகத்தில் அவரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் இருவரும் மரபுபடி பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள்.

பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபைக்குள் அழைத்து செல்லப்படுவார். அவருக்கு முன்னதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்து இருப்பார்கள்.

கவர்னர் வந்ததும் அவர்கள் அனைவரும் எழுந்து வணக்கம் தெரிவிப்பார்கள். பதிலுக்கு கவர்னர் வணக்கம் தெரிவித்து விட்டு அமருவார். அதன் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை நிகழ்ச்சிகள் தொடங்கும்.

கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட உரையை வாசிப்பார். அவர் உரையாற்றி முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு தமிழாக்கத்தை வாசிப்பார். அதுவரை கவர்னர் சபையில் அமர்ந்து இருப்பார்.

வழக்கமாக கவர்னர் உரை புத்தகமாக தயாரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு முதல் காகிதம் இல்லாத உரையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கணினி திரையில் உள்ள உரையை கவர்னரும், சபாநாயகரும் பார்த்து படிப்பார்கள். கவர்னர் உரை முடிந்ததும் கவர்னர் ஆர்.என்.ரவியை மரபுபடி வழியனுப்பி வைப்பார்கள்.

அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில் சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்வார்கள்.

10-ந் தேதி சட்டசபை கூடியதும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டத்தை ஒத்திவைக்க வாய்ப்புள்ளது. எனவே சட்டசபை 11, 12-ந்தேதிகளில் 2 நாட்கள் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. தேவைப்பட்டால் 13-ந்தேதி வரை நடத்துவதற்கு முடிவு செய்வார்கள்.

Tags:    

Similar News