அரிசி கொம்பன் யானை பெயரில் ரசிகர் மன்றம்- ஜீப் டிரைவர்கள் தொடங்கிய டீக்கடை
- யானை தேனி மாவட்டம் மேகமலை வனச்சரணாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றி வருகிறது.
- பூப்பாறை பகுதியில் ஜீப் டிரைவர்கள் இணைந்து அரிசி கொம்பன் தேநீர் கடையை தொடங்கி உள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை ஊராட்சிகளில் 8 பேரை பழிவாங்கிய அரிசி கொம்பன் யானை பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது. இந்த ஆண் காட்டுயானையை கேரள வனத்துறையினர் கடந்த மாதம் 29-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்து பெரியாறு புலிகள் காப்பகம் வனப்பகுதியில் விட்டனர்.
தற்போது இந்த யானை தேனி மாவட்டம் மேகமலை வனச்சரணாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றி வருகிறது. மணலாறு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பை சேதப்படுத்தி அங்கிருந்த ரேசன் கடையையும் உடைத்து சூறையாடியது. மேலும் நள்ளிரவில் வரும் அரசு பஸ்சையும் மறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். பெரும்பாலும் வனப்பகுதியை ஒட்டியே நடமாடும் இந்த அரிசி கொம்பன் யானை இரை தேடுவதற்காக மட்டும் குடியிருப்பு பகுதியை நோக்கி வருகிறது. அதன்மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கும்போது உயிர்பலி ஏற்படுகிறது.
ஆரம்பத்தில் அரிசி கொம்பன் யானை மீது கோபம் ஏற்பட்ட மக்களுக்கு தற்போது அனுதாப அலை வீசி வருகிறது. இதனிடையே அரிசி கொம்பனின் கதையை திரைப்படமாக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதனால் இடுக்கி மாவட்டத்தில் அரிசி கொம்பனுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.
அவர்கள் அரிசி கொம்பன் பெயரில் ரசிகர் மன்றத்தை தொடங்கி உள்ளனர். வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு மட்டுமே சொந்தம். அங்கு குடியிருப்புகள் அதிகரிப்பால் வனவிலங்குகள் உள்ளே வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியையும், வனவிலங்குகளையும் காப்போம் என்ற அடிப்படையில் பிரசாரமும் செய்து வருகின்றனர்.
மேலும் பூப்பாறை பகுதியில் ஜீப் டிரைவர்கள் இணைந்து அரிசி கொம்பன் தேநீர் கடையை தொடங்கி உள்ளனர். இங்கு வரும் பொதுமக்களுக்கும் வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இது உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.