தமிழ்நாடு (Tamil Nadu)

மாரடைப்பு ஏற்பட்ட தந்தையை காப்பாற்ற ரெயில்வே கேட்டை உடைத்துகொண்டு மின்னல் வேகத்தில் காரில் பறந்த வாலிபர்

Published On 2023-01-17 07:22 GMT   |   Update On 2023-01-17 07:22 GMT
  • தந்தையின் உயிரை காப்பாற்ற வேண்டுமே என்ற பதற்றத்தில் காரில் மின்னல் வேகத்தில் ரெயில்வே கேட்டை உடைத்து கொண்டு சென்ற வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
  • சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி:

தருமபுரியை அடுத்துள்ள நல்லம்பள்ளி ஆதி திராவிடர் காலனியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் கணேஷ்குமார். இன்று அதிகாலை பழனிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

வலியால் அவர் அலறி துடிக்கவே கணேஷ்குமார் தனது காரில் தந்தையை ஏற்றிக்கொண்டு தருமபுரிக்கு புறப்பட்டுள்ளார்.

கிளம்பிய அவசரத்தில் அப்பகுதியில் உள்ள புதிய மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதை மறந்துவிட்டு வழக்கமாக செல்லும் கலெக்டர் பங்களா வழியாக காரில் சென்றுள்ளார்.

அவ்வழியில் உள்ள ரெயில்வே கேட் மூடி இருந்துள்ளது. அந்த கேட் முன்பாக ஒரு ஆட்டோ ஒன்றும், இரு சக்கரவாகனம் ஒன்றும் நின்று கொண்டிருந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த கணேஷ்குமார் காரை வேகமாக ஓட்டிச்சென்று ஆட்டோ மீதும், இருசக்கர வாகனம் மீதும் மோதிவிட்டு நேராக ரெயில்வே கேட்டை இடித்து தள்ளிவிட்டு தருமபுரி நோக்கி சென்றார்.

இதில் ரெயில்வே கேட் சுக்கு நூறாக நொறுங்கியது. மேலும் ஆட்டோ சேதமானது. ஆட்டோ டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த கோவிந்தசாமி என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையின் உயிரை காப்பாற்ற வேண்டுமே என்ற பதற்றத்தில் காரில் மின்னல் வேகத்தில் ரெயில்வே கேட்டை உடைத்து கொண்டு சென்ற வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News