தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: அடுத்தடுத்து 3 முறை மின் கம்பங்களில் சிக்கிய தேரின் அலங்கார பந்தல்
- மின் ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
- மின்கம்பத்தில் இருக்கும் ராடு குத்தியதில் ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலில் இன்று காலை சித்திரை பெருவிழா தேரோட்டம் தொடங்கியது. தஞ்சை மேலவீதியில் இருந்து தேர் காலை 7 மணிக்கு வடம் பிடித்து புறப்பட்டது.
அப்போது புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு தனியார் நிறுவன பெயர் பலகையில் தேரின் அலங்கார பந்தல் திடீரென சிக்கி கொண்டது. பின்னர் அதனை சரிசெய்து 15 நிமிடங்களுக்கு பிறகு தேர் புறப்பட்டது.
இதையடுத்து நகர்ந்த தேர் கொங்கனேஸ்வரர் கோவில் அருகே சென்றபோது, மீண்டும் வலது புற மின் கம்பத்தில் தேரின் அலங்காரப் பந்தல் சிக்கியது. பின்னர் இடையூறாக இருந்த மின் கம்பி அகற்றப்பட்ட பிறகு தேர் சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் புறப்பட்டு சென்றது.
ஆனால் அடுத்த 50 அடி தொலைவில் வலது புற மின் கம்பத்தில் தேரின் அலங்காரப் பந்தல் வலது புற மின் கம்பத்தில் சிக்கியதால் மீண்டும் தேர் நின்றது.
இதையடுத்து மின் ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மின்கம்பத்தில் இருக்கும் ராடு குத்தியதில் ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
இருந்தாலும் அலங்கார பந்தலை மின் கம்பத்தில் இருந்து அகற்றி சரி செய்யப்பட்டது. தொடர்ந்து காயமடைந்த ஊழியர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இப்படி 3 முறை மின் கம்பங்களில் சிக்கி தேர் அடிக்கடி நின்றதற்கு அலங்காரப் பந்தலின் அகலம் வழக்கத்தை விட அதிகம் என்பதே முதன்மை காரணமாக கூறப்பட்டது. இதனால் அலங்கார பந்தலின் அகலத்தை தொழிலாளர்கள் குறைத்தனர். அதன் பின்னர் தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது.