திருவள்ளூர் தொகுதியில் ரூ.4½ லட்சம் பணத்துடன் கட்சி நிர்வாகி ஓட்டம்
- மாவட்ட நிர்வாகி பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதால் செலவு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.
- திருவள்ளூர் தொகுதி வாக்காளர்கள் கை கொட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல்களை கட்டி உள்ள நிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி நிர்வாகிகளுக்கு பணத்தை வாரி வழங்கி வருகிறார்கள்.
இந்த பணத்தை வைத்தே கட்சி நிர்வாகிகள் தங்களுடன் வருபவர்களுக்கு செலவு செய்கிறார்கள். மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களிடம் இது போன்ற பணம் மொத்தமாக வழங்கப்பட்டு பின்னர் பிரித்து கொடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு கட்சியிலும் பொறுப்பில் இருப்பவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி அதனை கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு கொடுத்து செலவு செய்ய சொல்லி வருகிறார்கள் .
கூட்டத்துக்கு ஆட்களை சேர்ப்பது பிரசாரத்துக்கு வருபவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பது என அத்தனை செலவுகளும் இந்த பணத்தை வைத்தே செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தனக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் ரூ.4 லட்சத்து 73 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார்.
வேட்பாளரிடம் சென்று 500 ரூபாய் கட்டுகளாக பணத்தை வாங்கிய அந்த மாவட்ட நிர்வாகி கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு பணத்தை பிரித்துக் கொடுக்காமல் ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குறிப்பிட்ட கட்சியின் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் இது பற்றி கட்சியின் மாவட்ட தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை தங்களது பகுதியில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களிலும் பதிவிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
கட்சியின் பெயர் மாவட்ட செயலாளர் ஆகியோரது பெயரையும் படத்தையும் வெளியிட்டு வேட்பாளரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றவர் தலைமறைவாகி விட்டார். கட்சி நிர்வாகிகள் யாருக்கும் அவர் பணத்தை பிரித்து கொடுக்க வில்லை என்று குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.
தங்களது கட்சியின் பெயரை குறிப்பிட்டு நாங்கள் பணத்திற்காக வேலை செய்பவர்கள் இல்லை இருப்பினும் மாவட்ட நிர்வாகி பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதால் செலவு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
இதற்கு மேல் பணம் கொடுப்பதாக இருந்தால் அவரிடம் கொடுக்க வேண்டாம் என்றும் தங்களிடம் தனித்தனியாக பணத்தை கொடுத்து விடுங்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.
இந்த விவகாரம் திருவள்ளூர் தொகுதி முழுவதும் பரபரப்பான பேச்சாக மாறியிருக்கிறது. தேர்தல் செலவுக்காக கொடுத்த பணத்தை கட்சி நிர்வாகி சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்து இருக்கும் சம்பவத்தை பார்த்து திருவள்ளூர் தொகுதி வாக்காளர்கள் கை கொட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளும் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறார்கள்.