வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் 3 பேர் பலியான இடத்தில் கலெக்டர் ஆய்வு
- ரெயில்வே நிர்வாகத்திற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
- வருகிற 6 மாதத்திற்குள் சுரங்கப்பாதை பணிகள் முடிவடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் கடந்த 19-ந் தேதி தண்டவாளத்தை கடக்க முயன்ற தந்தை-2 மகள்கள் மின்சார ரெயில் மோதி பலியானார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில் நிலையத்தில் முடிக்கப்படாத சுரங்கநடைபாதை பணி மற்றும் மேம்பாலப்பணியே இந்த விபத்து ஏற்பட காரணம் என்று கூறி பொதுமக்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தநிலையில் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் 3 பேர் பலியான இடத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார். அப்போது வருவாய்த்துறை மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார்.
அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் பிரபு சங்கரிடம் கடந்த 10 ஆண்டுகளாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பால பணிகள் மற்றும் சுரங்கப்பாதை பணிகள் குறித்து சரமாரியாக குற்றம் சாட்டினர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் பிரபு சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் ஏற்கனவே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சுரங்கப்பாதை பணிகள் முழுமையாக செய்வதற்கு நில எடுப்பு சம்பந்தமான அறிவுரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரெயில்வே நிர்வாகத்திற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேம்பால பணிகள், ரெயில் நிலையத்தில் பணிகள் முடிவடையும் வரை தண்டவாளத்தை கடக்கும் பயணிகளுக்கு முன்எச்சரிக்கை செய்வதற்கு 24 மணி நேரமும் காவலர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
இதேபோல் மாவட்டத்தில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் மனித உயிரிழப்பு மற்றும் கால்நடைகள் உயிரிழப்புகளை தடுக்கும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். சுரங்கப்பாதை அமைப்பதற்கு தனிநபரிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்துவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதை பணிகளுக்கு அதற்கான நில உரிமையாளரிடம் கலந்தாலோசித்து வருகிற 6 மாதத்திற்குள் சுரங்கப்பாதை பணிகள் முடிவடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர்கள் செல்வ நம்பி, கணேசன், ரெயில்வே துறை கோட்ட பொறியாளர் ஜம்ஷீர், உதவி கோட்ட பொறியாளர் சரவணன் பவன், திருவள்ளூர் தாசில்தார் சுரேஷ் குமார் உடன் இருந்தனர்.