தமிழ்நாடு

மீண்டும் மினி பஸ்... வெளியான முக்கிய அறிவிப்பு

Published On 2024-06-18 04:36 GMT   |   Update On 2024-06-18 04:36 GMT
  • எந்தெந்த வழித்தடத்தில் மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்குவது என ஆர்.டி.ஓ-க்கள் முடிவு செய்யலாம்.
  • பொதுமக்கள் ஜூலை 14ம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் சேவை இயக்கப்பட்டு வந்தாலும் குறுகிய தெருக்கள், ஊர்களுக்குள் பேருந்துகள் சேவை இல்லாத நிலை நீடித்தது. இதன் காரணமாக மக்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மினி பஸ்களுக்கான அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக 25 கி.மீ தூரம் வரை மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படும். அனைத்து மினி பஸ்களிலும் GPS வசதி பொறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோளிங்கநல்லூர் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படும். அதே நேரத்தில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எந்தெந்த வழித்தடத்தில் மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்குவது என ஆர்.டி.ஓ-க்கள் முடிவு செய்யலாம். இது தொடர்பாக பொதுமக்கள் ஜூலை 14ம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News