கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது: சுற்றுலா பயணிகள் பீதி
- கடலுக்கு அடியில் இருந்த பாறைகளும் மணல் பரப்புகளும் வெளியே தெரிந்தன.
- விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் எந்த மாற்றமும் காணப்படவில்லை.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கிழக்கே வங்க கடலும் தெற்கே இந்திய பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் அமைந்து உள்ளன. இதனால் இந்த முக்கடல் சங்கமத்தை பார்த்து ரசிப்பதற்காக இந்த 3 கடல்களும் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
வழக்கம்போல இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண தீபாவளி பண்டிகை காரணமாக குறைவான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் 50 அடி தூரத்துக்கு கடல் "திடீர்" என்று உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.
இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகளும் மணல் பரப்புகளும் வெளியே தெரிந்தன. வழக்கமாக சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்துவிட்டு முக்கடல் சங்கமத்தில் கடலில் புனித நீராடுவது வழக்கம். ஆனால் இன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் கடல் உள்வாங்கி இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்த குளியல் போடுவதற்கு கூட போதுமான தண்ணீர் இல்லை.
சில இடங்களில் முட்டளவு தண்ணீரும், சில இடங்களில் கரண்டை கால் அளவுக்கு மட்டுமே கடலில் தண்ணீர் தேங்கி நின்று கொண்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கடலில் இறங்கி ஆனந்த குளியல் போடுவதற்கு அச்சம் அடைந்தனர். அதையும் மீறி கடலில் இறங்கி நின்ற சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா போலீசார் எச்சரித்து வெளியேற்றினர்.
ஆனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் எந்த மாற்றமும் காணப்படவில்லை. இன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். இதற்கிடையில் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கிய புரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இருப்பினும் வள்ளம், கட்டுமரங்களில் மீனவர்கள் வழக்கம்போல் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீனவர்களும் அதிக அளவில் மீன்களை பிடித்துக் கொண்டு வந்தனர்.