தமிழ்நாடு (Tamil Nadu)

குளு குளு சீசன் காரணமாக குற்றாலத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

Published On 2024-06-23 06:02 GMT   |   Update On 2024-06-23 06:02 GMT
  • மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் குற்றாலம் பகுதிகளில் ரம்மியமான காலநிலை நிலவி வருகிறது.
  • மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தென்காசி:

தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் குற்றாலம் அருவிகளை ஒட்டிய பகுதிகளில் நேற்று மாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

இதனால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக விழுகிறது. இதனால் அதில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.

இன்று விடுமுறை தினம் என்பதால், வெளியூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் குற்றாலம் பகுதிகளில் ரம்மியமான காலநிலை நிலவி வருகிறது.

இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்யும் பட்சத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அங்கு பாதுகாப்பு பணியில் அதிகளவில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News