வாழப்பாடி அருகே பனை விதைகளை சேகரித்து நீர் நிலைகளில் விதைத்த மக்கள்
- மண் அரிப்பை தடுப்பதால் நீர்நிலைகளின் கரைகளில் பனைமரங்கள் வளர்க்கப்பட்டன.
- பனை தரும் 'நுங்கு' உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தருகிறது.
வாழப்பாடி:
வறண்ட நிலங்களிலும் வறட்சியை தாங்கி வளர்ந்து, நீண்ட கால பலன் தரும் மரங்களுள் 'பனை' முதன்மையானதாகும். இதன் குழல் போன்ற சல்லி வேர்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி, நிலத்தின் மேற்பரப்புக்கு கொண்டு வரும் தகவமைப்பு கொண்டதால், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. மண் அரிப்பை தடுப்பதால் நீர்நிலைகளின் கரைகளில் பனைமரங்கள் வளர்க்கப்பட்டன.
நமது மாநில மரமாக போற்றப்படும் பனை மரத்தின் ஓலைகள் குடிசை கூரை வேய்தல், விசிறி, கலைப்பொருட்கள் செய்ய பயன்படுகிறது. பனை தரும் 'நுங்கு' உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தருகிறது. பனை மரத்தில் எடுக்கப்படும் பதநீரை பதப்படுத்தி சித்த மருந்துகளில் சேர்க்கப்படும் வெல்லம், கருப்பட்டி, பனங்கற் கண்டு தயாரிக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பனை மரத்துப்பட்டி, பெத்த நாயக்கன்பாளையம், வீரபாண்டி, ஆத்துார், கெங்கவல்லி, தம்மம்பட்டி, ஏத்தாப்பூர், பேளூர் பகுதிகளில் மானாவரி, தரிசு நிலங்கள் மற்றும் ஆறு, குளம், குட்டை, நீரோடை, ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரையோரங்களிலும் பனைமரங்கள் நிறைந்து காணப்பட்டன. சேலம் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் பனைமரங்கள் நிறைந்திருந்த பெரும்பாலான பனந்தோப்புகள் அழிந்து விட்டன.
நீர்நிலைகளின் கரையோரங்களிலும், தரிசு நிலங்களிலும், விளை நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் இருந்த ஆயிரக்கணக்கான பனை மரங்களும், செங்கல் சூளைகளுக்கும், வீட்டு உபயோக பயன்பாட்டிற்காகவும் வெட்டப்பட்டன. வறட்சியை தாங்கி வளர்ந்து நீண்டகாலத்திற்கு பலன் தரும் பனை மரங்களை வளர்க்க தற்கால சந்ததியிடையே ஆர்வம் இல்லை. இதனால் சேலம் மாவட்டத்தில் பனை மரங்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் குறைந்து வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த விலாரிபாளையம் கிராமத்தில் விலாரிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வராணி மற்றும் இவரது கணவர் மணி ஆகியோர் முன்னிலையில் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் ஒன்றிணைந்து, உதிர்ந்து விழுந்து கிடந்த ஆயிரத்திற்கும் அதிகமான பனை விதைகளை சேகரித்தனர்.
இந்த விதைகளை கிராமத்திலுள்ள நீர்நிலைகள் மற்றும் தரிசு நிலங்களிலும் விதைத்து வருகின்றனர்.அசுர வேகத்தில் குறைந்து வரும் நீண்டகால பலன்தரும் பனை மரங்களை வளர்க்கவும், மற்ற கிராம மக்கள்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவும், பனை விதைகளை சேகரித்து விதைத்து முன்னுதாரணமான விலாரிபாளையம் கிராம மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.