வேலூர் கோர்ட்டில் கதிர் ஆனந்த் ஆஜர்
- வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.10.48 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.
- வழக்கின் விசாரணை வேலூர் ஜெ.எம் 1 கோர்ட்டில் நடந்து வருகிறது.
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தேர்தலின்போது தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார்.
அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கதிர்ஆனந்துக்கு நெருக்கமான தி.மு.க பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது தாமோதரன் என்பவருக்கு சொந்தமான சிமெண்ட் குடோனில் இருந்து தி.மு.க வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.10.48 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், வாக்குச்சாவடி விவரங்களுடன் கூடிய ஆவணங்களுடன் புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டு கட்டுகள் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக காட்பாடி போலீஸ் நிலையத்தில் அப்போதைய தேர்தல் கணக்கு அலுவலர் சிலுப்பன் அளித்த புகாரின் பேரில் தி.மு.க வேட்பாளர் கதிர்ஆனந்த், தி.மு.க பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை வேலூர் ஜெ.எம் 1 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக கதிர் ஆனந்த் எம்.பி. இன்று கோர்ட்டில் ஆஜரானார். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்