தமிழ்நாடு

வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு- தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6.18 கோடி பேர்

Published On 2022-11-09 05:38 GMT   |   Update On 2022-11-09 05:38 GMT
  • தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
  • அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.65 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

சென்னை:

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணி கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இதையொட்டி துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கி 7-ந்தேதியுடன் முடிவடைந்தது.

தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

சென்னையில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 3 லட்சத்து 95 ஆயிரத்து 103 பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 321 பேர் உள்ளனர். 3-ம் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.65 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சென்னையில் வருகிற 12, 13 மற்றும் 26, 27-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு சென்னை மயிலாப்பூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News