தமிழ்நாடு

இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும்- கே.எஸ்.அழகிரி

Published On 2023-12-17 08:18 GMT   |   Update On 2023-12-17 08:18 GMT
  • சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் சதவீத அடிப்படையில் உயர்ந்துள்ளது.
  • வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதற்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக மோடி கூறினார்

நெல்லை:

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நெல்லையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ரெயில் மூலமாக சென்னையில் இருந்து நெல்லை வந்தார்.

தொடர்ந்து பாளை ஜோதிபுரத்தில் கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து நெல்லை சந்திப்பில் நடைபெற்ற மாணவர் காங்கிரஸ் பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்று பேசிய பின்னர் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் புயலால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கடலில் எண்ணெய் கழிவு கலந்ததற்கு எண்ணெய் நிறுவனத்தின் கவனக்குறைவே காரணம் இது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை விசாரணை நடத்த வேண்டும்.

4 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் சதவீத அடிப்படையில் உயர்ந்துள்ளது.

தேர்தலில் தோற்றாலும் இந்தியா கூட்டணி கொள்கை பிடிப்போடு செயல்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும்.

பாராளுமன்றத்தில் அத்துமீறிய விவகாரத்தில் அவர்கள் யார்? எதற்காக வந்தார்கள்? எப்படி உள்ளே நுழைந்தார்கள் என்பது குறித்து எந்த உண்மையையும் இந்திய உள்துறை அமைச்சகம் இதுவரை தெரிவிக்கவில்லை. இது குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் அச்சப்படுகிறார். உள்துறை அமைச்சகம் அச்சப்படுகிறது. வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதற்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக மோடி கூறினார். ஆனாலும் இதுவரை இளைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என பிரதமர் உணர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News