தமிழ்நாடு

தி.மு.க - விடுதலை சிறுத்தைகளின் நாடக அரசியல் அம்பலமாகிவிட்டது- பா.ஜ.க. கருத்து

Published On 2024-09-16 08:37 GMT   |   Update On 2024-09-16 08:37 GMT
  • தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் தேசிய மதுவிலக்கு கொள்கையை மட்டும் ஏற்பீர்களா?
  • அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நடத்தும் ‘மது ஒழிப்பு மாநாடு’ என்ற நாடகம் மக்கள் மத்தியில் எடுபடாது.

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மதுவிலக்கு மாநாட்டை அறிவித்து அ.தி.மு.க.வுக்கும் அழைப்பு விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று அறிவித்தார் . இந்த சூழ்நிலையில் திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். அதன் பிறகு அவர் கூறும்போது எங்கள் கூட்டணியில் விரிசல் இல்லை. மதுவிலக்கு மாநாட்டில் தி.மு.க. பங்கேற்கும் என்றார்.

மாறி மாறி பேசும் இந்த முரண்பட்ட கருத்துக்கள் பற்றி பா.ஜனதா நிர்வாகிகள் கூறியதாவது:-

டாக்டர் தமிழிசை (பா.ஜனதா)

தமிழகத்தில் மதுவிலக்கு மாநாடு நடத்தப்போகிறேன். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டாலும் கவலை இல்லை என்று தீரமுடன் புறப்பட்ட திருமாவளவன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததும் தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் தேசிய மதுவிலக்கு கொள்கையை மட்டும் ஏற்பீர்களா? அரசே வருமானம் என்ற பெயரில் மதுக்கடைகளை நடத்துகிறது. ஆளும் கட்சியினரே 40 சதவீத மது ஆலைகளையும் நடத்துகிறார்கள். தேசிய அளவில் மதுவிலக்கு வந்தால் எப்படி ஏற்பீர்கள்.

மத்திய அரசில் பல ஆண்டுகளாக அங்கம் வகித்தும் பாராளுமன்றத்தில் தேசிய மதுவிலக்கு பற்றி தி.மு.க. என்றாவது பேசியதுண்டா? இப்போது விடுதலை சிறுத்தைகளுக்கு 2 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். தேசிய மதுவிலக்கு பற்றி பாராளுமன்றத்தில் இதுவரை பேசவில்லையே ஏன்?

அப்பட்டமான உங்கள் அரசியல் நாடகம் அம்பலமாகி விட்டது. தி.மு.க. கூட்டணியில் அஸ்திவாரத்தில் குழி பறித்து அசைத்து பார்க்க நினைத்தீர்கள். அது பலிக்கவில்லை என்றதும் எல்லாவற்றையும் மடை மாற்றி மத்திய அரசு பக்கம் திருப்பி விடுகிறீர்கள். இதையே தான் நீட் விவகாரத்தில் செய்தீர்கள். புதிய கல்வி கொள்கையிலும் செய்து வருகிறீர்கள். இப்போது மது விலக்கையும் உங்களாலோ உங்கள் கூட்டணியாலோ கொண்டு வரமுடியாது என்றதும் மடை மாற்றுகிறீர்கள்.

முதலில் தி.மு.க.வினர் மது ஆலைகளை மூடிவிட்டு மதுவுக்கு எதிராக போராட வேண்டும். மக்களை ஏமாற்றாதீர்கள். திருமாவின் தேர்தல் பேரத்தை எத்தனை நாள்தான் மக்கள் நம்புவார்கள்? அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நடத்தும் 'மது ஒழிப்பு மாநாடு' என்ற நாடகம் மக்கள் மத்தியில் எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா ஊடக பிரிவு தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருமாவளவன் அவர்களே, இரண்டு திராவிட கட்சிகளுமே கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு இல்லை என்று மறுத்து விட்டது.

இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி இந்திய மக்களின் மகிழ்ச்சிக்காக இந்தியாவின் வளர்ச்சிக்காக வறுமையை ஒழிப்போம். ஊழலை ஒழிப்போம்.

உலகின் வளமான வலிமையான வல்லரசாக இந்தியாவை உருவாக்குவோம் என்ற அடிப்படை யில் பா.ஜனதா கட்சி ஜனநாயக முறைப்படி ஒருமித்த கொள்கையுடன் அமைத்த கூட்டணி 3-வது முறை வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்திருக்கிறது.

மத்திய அமைச்சரவில் அனைத்து கூட்டணி கட்சிகளின் பங்கு இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தலிலே போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளுக்கும் அவரவர் வலிமைக்கேற்ப சமமான முறையில் அமைச்சரவையிலே இடமளித்து முக்கிய இலாகாக்களை ஒதுக்கி பா.ஜ.க. ஒரு சிறந்த ஜனநாயக கட்சி என்பதை நிரூபித்திருக்கிறார்.

மத்திய மோடி அரசு கூட்டணி ஆட்சிக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் துணிந்து கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சியுடன் தான், இனி உறவு இனி தேர்தல் கூட்டணி என்று துணிந்து அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க.வும், பா.ம.க.வும் நீண்ட காலமாக தன் முனைப்புடன் மிகப்பெரிய விழிப்புணர்வு பிரசாரங்களையும் போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளது.

இன்று பா.ஜ.க. மற்றும் பா.ம.க. கட்சிகள் இல்லாமல் மதுவிலக்கு ஆதரவு மாநாடு நடத்துவேன் என்று கூறியதில் இருந்து உங்களின் சுயநல அரசியலும் உள்நோக்கமும் அனைவருக்கும் புரிந்து விட்டது.

மதுவிலக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று நீங்கள் பூசி வந்த அரிதாரம் இன்று ஒரே நாளில் கலைந்து விட்டதே இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News