தமிழ்நாடு (Tamil Nadu)

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் எதிரொலித்த ஹத்ராஸ் சம்பவம்... சரமாரி கேள்வி கேட்ட நீதிபதி... விசாரணை தள்ளிவைப்பு

Published On 2024-07-07 04:04 GMT   |   Update On 2024-07-07 04:04 GMT
  • அடக்கம் செய்ய அனுமதி கோரும் இடம் குடியிருப்பு பகுதியா? என நீதிபதி கேள்வியெழுப்பினார்.
  • எங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆம்ஸ்ட்ராங் மனைவி தரப்பில் வாதிக்கப்பட்டது.

சென்னை:

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தரப்பில் சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு தொடர்பாக மாநகராட்சி கமிஷனர், எந்த பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, இந்த கோரிக்கை தொடர்பாக அவசரமாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொற்கொடி தரப்பில் சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

அதன்படி, இந்த மனுவை தனி நீதிபதி ஒருவர் விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, இன்று காலை 9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் முன் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, ஆம்ஸ்ட்ராங்குக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யவே அனுமதி கோரப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய, அருகில் வசிப்பவர்கள் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை என மனைவி தரப்பில் வாதிக்கப்பட்டது.

அடக்கம் செய்ய அனுமதி கோரும் இடம் குடியிருப்பு பகுதியா? என நீதிபதி கேள்வியெழுப்பினார்.

16 அடி சாலை அருகில் இந்த நிலம் அமைந்துள்ளது. ஏராளமான வீடுகள் அமைந்துள்ளன. வீட்டில் இருந்து 1.5கி.மீ. தூரத்தில் ஒரு இடம் தேர்ந்தெடுத்துள்ளோம். அங்கு அடக்கம் செய்து கொள்ளலாம். குடியிருப்பு பகுதி, குறுகலான சாலை போன்ற காரணங்களை கூறிதான் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தரப்பில் கூறப்பட்டது.

மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் தான் அடக்கம் செய்ய முடியும். சட்டப்படி குடியிருப்பு பகுதிகளில் அடக்கம் செய்ய முடியாது. மணிமண்டபம் கட்ட பெரிய இடம் வேண்டும் என்றால் 2,400 சதுர அடி அரசு வழங்குகிறதே என நீதிபதி கூறினார்.

இதற்கிடையே, எங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆம்ஸ்ட்ராங் மனைவி தரப்பில் வாதிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி உங்கள் தரப்பை கேட்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்றால் அதற்கு நேரம் எடுக்கும் என கூறினார்.

ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. ஹத்ராஸ் நெரிசல் சம்பவம் போல் எதிர்காலத்தில் ஏதேனும் நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள்? என கேள்வி கேட்ட நீதிபதி பெரிய சாலை, பெரிய இடம் இருந்தால் கேட்டு சொல்லுங்கள் உத்தரவு பிறப்பிக்கிறேன். தற்போதைக்கு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக்கொள்ளலாம். எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படக்கூடாது. இந்த யோசனை குறித்து மனுதாரரிடம் கேட்டு சொல்லுங்கள், உத்தரவு பிறப்பிக்கிறேன் என்று கூறி வழக்கு விசாரணை 10.30 மணிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Tags:    

Similar News