தமிழ்நாடு

கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி 6-ம் வகுப்பில் மாணவி ஒருவர், பாடம் நடத்தியதை காணலாம்.

போராட்டத்திற்கு சென்ற ஆசிரியர்கள்: பள்ளியில் பாடம் நடத்தி அசத்திய மாணவ-மாணவிகள்

Published On 2024-09-11 03:45 GMT   |   Update On 2024-09-11 03:45 GMT
  • கோவில்பட்டி புதுரோட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
  • ஒவ்வொரு வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் பாடங்கள் நடத்தி அசத்தினார்கள்.

கோவில்பட்டி:

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில் பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கக்கூடியதாக மாநில முன்னுரிமையை கொண்டு வந்துள்ள அரசாணை 243-ஐ ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கல்வி மாவட்டத்திலும் போராட்டம் காரணமாக பல பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவில்பட்டி புதுரோட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளது. 250 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியர் உள்பட 8 பேர் பணியாற்றி வருகின்றனர். மேலும் 2 ஆசிரியர்கள் மாற்றுப்பணியாக பணியில் உள்ளனர்.

ஆசிரியர்களின் போராட்டத்தில் பங்கேற்பதற்காக 8 ஆசிரியர்கள் சென்றுவிட்டனர். தலைமை ஆசிரியர் சுப்பாராயன் என்பவரும் பயிற்சியில் பங்கேற்க சென்றுவிட்டார். இதனால் ஒரு ஆசிரியர் மட்டுமே இருந்ததால், ஆத்திக்கிணறு பள்ளியில் இருந்து மாற்றுப்பணியாக ஒரு ஆசிரியர் வந்திருந்தார். 2 ஆசிரியர்கள் மட்டும் இருந்தனர்.

இதனால் பெரும்பாலான வகுப்புகளில் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவ-மாணவிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இருந்தபோதிலும் ஒவ்வொரு வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் பாடங்கள் நடத்தி அசத்தினார்கள். அதாவது, தங்களது ஆசிரியர்கள் கற்பித்த பாடங்களை மாணவ-மாணவிகள் கரும்பலகையில் எழுதிப்போட்டு சக மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்கள். இது மற்ற மாணவர்களிடையே வரவேற்பை பெற்றது.

Tags:    

Similar News