3-வது நாளாக சோதனை ஓட்டம்: நெல்லை-திருச்செந்தூர் வழித்தடத்தில் சென்னை அதிகாரிகள் குழு இன்று ஆய்வு
- போக்குவரத்துக்கு தயாரானதை தொடர்ந்து டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது.
- குழுவானது குளிர் சாதன பெட்டிகளை பொருத்தப்பட்ட மின்சார ரெயில் என்ஜின் மூலம் பயணித்து திருச்செந்தூர் செல்கின்றனர்.
நெல்லை:
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த மாதம் 17,18-ந் தேதிகளில் பெய்த பலத்த மழையால் ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதிகளில் வெள்ளம் தண்டவாளத்தை சேதப்படுத்தி வயல் பகுதிக்குள் தூக்கி வீசியது. மேலும் தண்டவாளத்தில் அடிப்பகுதியில் இருந்து ஜல்லி கற்கள் மற்றும் மண்ணை அரித்துச்சென்றது.
இதனால் திருச்செந்தூர்-நெல்லை இடையே பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. செந்தூர் எக்ஸ்பிரஸ் நெல்லையுடன் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மீண்டும் தண்டவாளத்தை நிறுவும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளை நெல்லைக்கு மீட்டு கொண்டு வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக ஆழ்வார்திருநகரி-நாசரேத் இடையே சேதம் அடைந்த தண்டவாள பகுதி சீரமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் அங்கு தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்துக்கு தயாரானதை தொடர்ந்து டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது.
தொடர்ந்து மின்சார வழித்தடமும் சீரமைக்கப்பட்டு, நேற்று மதியம் மதுரை ரெயில்வே ஆய்வு குழுவினர் நெல்லை வந்தனர். அவர்கள் மின்சார ரெயில் என்ஜின் மூலம் திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டு சென்றனர். செல்லும் வழியில் ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதியில் புதிதாக சீரமைக்கப்பட்ட தண்டவாளம் மற்றும் மின்சார பாதை சரியாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் இருந்து பொறியாளர்கள் குழு, பாதுகாப்பு அதிகாரிகள் இன்று மதியம் நெல்லைக்கு வருகின்றனர். அவர்கள் மின்சார ரெயில் என்ஜின் மூலம் நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணித்து ஆய்வு செய்கிறார்கள். அந்த குழுவானது குளிர் சாதன பெட்டிகளை பொருத்தப்பட்ட மின்சார ரெயில் என்ஜின் மூலம் பயணித்து திருச்செந்தூர் செல்கின்றனர். அந்த குழுவின் ஆய்வு முடிவில் ரெயில் பாதை போக்குவரத்துக்கு தயார் என்பது உறுதி செய்யப்பட்டவுடன், இன்று இரவு முதலே போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வாய்ப்பு இருப்பதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த குழு அனுமதி அளிக்கும்பட்சத்தில் இன்று இரவு எக்ஸ்பிரஸ் ரெயிலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.