தமிழ்நாடு

வெள்ளாளன்விளையில் இருந்து ரப்பர் படகில் நீந்தியபடி வயலுக்கு செல்லும் பெண். 

வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் தீரவில்லை

Published On 2024-01-25 03:57 GMT   |   Update On 2024-01-25 03:57 GMT
  • ஏராளமான பொதுமக்களும் விவசாய தோட்டங்களும், கருப்பட்டி, கற்கண்டு, உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
  • வாழை விவசாயிகள், வாழை குலைகளை வெட்டி தண்ணீரில் எடுத்து கொண்டு வருகின்றனர்.

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாநகர பகுதிகள் மட்டுமின்றி திருச்செந்தூர், உடன்குடி, மெஞ்ஞானபுரம், ஆழ்வார்திருநகரி, ஏரல், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிய ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின.

இப்பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது. வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

அதேநேரம் இதுவரை பல ஆண்டுகளாக மழை இல்லாத பகுதிகளாக இருந்து வந்த உடன்குடி பகுதியில், கனமழை காரணமாக அனைத்து குளங்கள், குட்டைகள், ஆறு மற்றும் ஏராளமான தற்காலிகமான நீர் பிடிப்பு பகுதிகள் எல்லாமே சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் முழுமையாக நிரம்பியது.

இந்த ஆண்டு எல்லாமே முழுமையாக நிரம்பிவிட்டது என்று விவசாயிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.

ஸ்ரீவைகுண்டம் அணையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அத்துடன் இணைந்த சடைய நேரி கால்வாயில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக வந்து கொண்டிருந்தது.

இதனால் உடன்குடி அருகே உள்ள சடையனேரி குளம் கிழக்கு பகுதி உடைந்தது, அதில் இருந்து வெளியேறிய வெள்ளநீர் உடன்குடி ஒன்றிய பகுதியில் உள்ள மெஞ்ஞானபுரம், மானிக்கபுரம், லட்சுமிபுரம், வேப்பங்காடு, மருதூர் கரை, செட்டியாபத்து, பரமன்குறிச்சி, என்.எஸ். நகர், சிங்கராயபுரம், வட்டன் விளை, வெள்ளாளன் விளை, சீயோன்நகர், செட்டி விளை, சிதம்பரபுரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் ஏராளமான பொதுமக்களும் விவசாய தோட்டங்களும், கருப்பட்டி, கற்கண்டு, உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தேக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்புள்ள கருப்பட்டி, கற்கண்டு அனைத்தும் மழையிலும், வெள்ள நீரிலும் நனைந்தும் நாசமாயின.

மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையம், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன தண்ணீர் சூழ்ந்து இருந்ததால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் தற்காலிகமாக சுமார் 10 நாட்கள் வேறு இடங்களில் செயல்பட்டது. இதன் காரணமாக உடன்குடியில் இருந்து மெஞ்ஞானபுரம் செல்லும் நேர்வழி சாலையும், உடன்குடியில் இருந்து பரமன் குறிச்சி செல்லும் நேர்வழிச் சாலையும் முழுமையாக துண்டிக்கப்பட்டது.


நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு செல்லும் மக்கள் சுமார் 25 நாட்களாக பல கிலோமீட்டர் சுற்றி சுற்றி சென்று வந்தனர்.

இந்நிலையில், வட்டன் விளை மற்றும் சீயோன்நகர் பகுதியில் முதல் கட்டமாக ஏராளமான பம்புசெட், நீர் மோட்டார் மூலம் தேங்கி கிடந்த தண்ணீரை அருகில் உள்ள செம்மணல் தேரியில் கொண்டு சேர்க்கும் பணி இரவு பகலாக 10 நாட்கள் நடந்தது.

தண்ணீர் அப்புறப்படுத்தவில்லை. குறையவும் இல்லை, அடுத்து மெஞ்ஞானபுரம் அருகே உள்ள மருதூர் கரையில் சாலையை உயர்த்தி 15 நாட்களுக்கு பின் போக்குவரத்தை தொடங்கினர். உடன்குடியில் இருந்து செட்டியாபத்து மெஞ்ஞான புரம் வழியாக நெல்லைக்கு போக்குவரத்து தொடங்கியது.

அதன் பின்பு சியோன் நகர் அருகே பல லாரி மணல் மற்றும் கற்களை கொட்டி தரைப் பாலத்தை சுமார் 25 அடி உயர்த்தி 25 நாட்களுக்குப் பின் போக்குவரத்தை தொடங்கினர்.

ஆனாலும் இன்று வரை சுமார் 40 நாட்கள் ஆகியும் வட்டன் விளை ஊருக்குள் பரமன்குறிச்சி மெயின் ரோட்டில் இருந்து உள்ளே வர முடியாத அளவிற்கு சுமார் 10 அடி ஆழத்திற்கு இன்னும் தண்ணீர் தேங்கிகிடக்கிறது.

இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டத்தில் உள்ள தேங்காய்கள் மற்றும் விவசாய பொருட்ககளை தோட்டத்தில் இருந்து கொண்டு வருவதற்கு தற்காலிக படகு போல அமைத்து அதில் சென்று தேங்காய் மற்றும் விவசாய பொருட்களை வெளியில் கொண்டு வருகிறார்கள்.

தோட்டத்திற்கு நீச்சலில் செல்கிறார்கள். வாழை விவசாயிகள், வாழை குலைகளை வெட்டி தண்ணீரில் எடுத்து கொண்டு வருகின்றனர்.


இன்று வரை விவசாயிகள் மற்றும் பல தரப்பட்ட மக்கள் வடியாத வெள்ளத்தில் தங்களது வாழ்க்கையை கடத்தி வருகின்றனர்.

இது பற்றி விவசாயிகள் கூறும் போது, நிரந்தரமாக வடிகால் அமைத்தால் தான் இனி தண்ணீர் வடியும். தண்ணீர் வடிவதற்கு எந்த விதமான சூழ்நிலையும் தற்போது இல்லை.

தண்ணீர் தேங்கி 40 நாட்களை கடந்து விட்டதால் அதிகமான அளவில் சேறும்சகதியும் சேர்ந்து விட்டதால் தேங்கியதண்ணீர் பூமிக்குள் இறங்கும் நிலைமை இல்லை.

அதனால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வடிகால் அமைத்தால் தான் எங்கள் விவசாயங்களை நாங்கள் காப்பாற்ற முடியும். மீண்டும் புதியதாக விவசாயம் செய்ய முடியும் என்றனர்.

தரைமேல்பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான் என்ற ஒரு சினிமாபாடலை பாடிக்கொண்டு விவசாயிகளும், கிராம மக்களும் தண்ணீருக்குள் சென்று தங்கள் தோட்டத்தில் உள்ள விவசாய பயிர்களை வெளியே கொண்டு வருவது மிகவும் பரிதாபமாகவும், பரிதவிப்பாகவும் உள்ளது.

Tags:    

Similar News