மக்னா யானை ஊருக்குள் வருவதை தடுக்க 3 கும்கி யானைகள் கண்காணிப்பு
- மக்னா யானை பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட எல்லையில் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது.
- பொள்ளாச்சி வன பகுதிக்கு இடம்பெயர்ந்த மக்னா யானை கழுத்தில் ஏற்கனவே, ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.
பொள்ளாச்சி:
தர்மபுரி அருகே உள்ள கிராமங்களில், மக்னா என்ற காட்டு யானை சுற்றி திரிந்து வந்தது. இந்த யானை அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தியதுடன், பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது. இதனால் அந்த யானையை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் வனத்தில் விடப்பட்டது.
அங்கு விடப்பட்ட சில நாட்களிலேயே மக்னா யானை வனத்தை விட்டு வெளியேறி ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக கோவை நகருக்குள் வந்தது.
வனத்துறையினர், மீண்டும் அந்த யானையை, மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வால்பாறை அருகே உள்ள மந்திரி மட்டம் பகுதியில் விட்டனர்.
இதற்கிடையே அந்த மக்னா யானை, சுமார் ஒரு வாரத்துக்கு இடம் பெயர்ந்து சுமார் 36 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள டாப்சிலிப் வனத்திற்குள் புகுந்தது.
அந்த யானை, டாப்சிலிப் வனத்தையொட்டிய பொள்ளாச்சி வனச்சரகத்திற்குள் வந்து, அங்குள்ள கிராமத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக அறிந்த வனத்துறையினர், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக, சுமார் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மூலம் கண்காணித்தனர்.
இந்நிலையில், மக்னா யானை பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட எல்லையில் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் முதல், வனச்சரகர் புகழேந்தி தலைமையில், சுமார் 60க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சரளபதி பகுதியில் தனித்தனி குழுவாக கண்காணிப்பு பணியில் ஈடுபட துவங்கினர்.
இதற்கிடையே, வனத்திலிருந்து யானை வெளியேறி அங்குள்ள கிராமத்திற்குள் நுழையாமல் தடுக்க, கோழிக்கமுகத்தி முகாமிலிருந்து சின்னதம்பி, முத்து, ராஜவர்த்தனா ஆகிய 3 கும்கி யானைகள் சரளபதி பகுதிக்கு நேற்று முன்தினம் வரவழைக்கப்பட்டது.
இந்த கும்கிகள் மூலம், மக்னா யானை கிராமத்திற்குள் நுழையாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி தீவிரமாக நடப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வால்பாறையில் இருந்து டாப்சிலிப் வழியாக பொள்ளாச்சி வன பகுதிக்கு இடம்பெயர்ந்த மக்னா யானை கழுத்தில் ஏற்கனவே, ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.
ஆனால், அந்த ரேடியோ காலர் பழுதானதால் யானை எங்கெங்கு செல்கிறது என கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஆங்காங்கே அமைக்கப்பட்ட வனத்துறை குழுவினர் மூலம் கண்காணிப்பு பணியை தொடர்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே சரள பகுதி அருகே உள்ள ஒரு மாந்தோப்பில் மக்னா யானை புகுந்ததாக வந்த தகவலின் பேரில், வனத்துறையினர் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திடீர் என ஆவேசமடைந்த மக்னா யானை, வனத்துறையினர் வந்த ஜீப்பை தாக்கி சேதப்படுத்தியது. இதில் டிரைவர் மணிகண்டன், வனவர் மெய்யப்பன் ஆகியோர் காயம் அடைந்தனர்.