கொடைக்கானலில் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்
- அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.
- வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக புல்வெளிகள், செடி-கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. மேலும் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.
பெரும்பள்ளம் வனப்பகுதி, குறிஞ்சி நகர், பழனி மலைச்சாலை உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத்தீ பற்றி அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் மச்சூர் வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ வேகமாக பரவி பல ஏக்கர் பரப்பிலான மரங்கள் மற்றும் செடிகளை நாசம் செய்தது.
இது குறித்து அறிந்ததும் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தற்போது வெப்ப தாக்கத்தின் காரணமாக அடிக்கடி காட்டுத் தீ பற்றி வருகிறது.
அன்றாட நிகழ்வு போல் தொடர்ந்து காட்டுத் தீ ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மலைப்பகுதியில் காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர் மற்றும் நவீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் காட்டுத்தீ தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது. வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள், பறவை இனங்கள் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.