திருட வந்தபோது நாயிடம் வசமாக சிக்கிய திருடன்
- வீட்டில் வளர்த்து வந்த சிப்பிப்பாறை நாய், வாலிபர் மேல் ஆக்ரோஷத்துடன் பாய்ந்தது.
- காலை வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த கோபால், தனது வளர்ப்பு நாய் மர்ம நபர் ஒருவரை பிடித்து வைத்திருந்ததை பார்த்து காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வடுகபாளையம் புதூர் ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்தவர் கோபால்(வயது 52) விவசாயி. சம்பவத்தன்று இரவு வாலிபர் ஒருவர் இவரது வீட்டு சுற்றுச்சுவரை தாண்டி குதித்து திருட முயன்றுள்ளார். இதைப்பார்த்த அவர் வீட்டில் வளர்த்து வந்த சிப்பிப்பாறை நாய், வாலிபர் மேல் ஆக்ரோஷத்துடன் பாய்ந்தது. பயத்தில் கதறியபடி நடுங்கிப் போன அந்த வாலிபர், ஆடாமல் அசையாமல் அங்கேயே அமர்ந்து விட்டார்.
அவரை நகர விடாமல் நாயும் அதே இடத்தில் அமர்ந்து அவரை கண்காணித்தபடி இருந்தது. இப்படியே, 2 மணி நேரம் ஆடாமல் அசையாமல் வாலிபர் உட்கார்ந்திருக்க, நாயும் அவரை பார்த்தபடியே இருந்தது. காலை வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த கோபால், தனது வளர்ப்பு நாய் மர்ம நபர் ஒருவரை பிடித்து வைத்திருந்ததை பார்த்து பல்லடம் காவல் நிலையத்துக்கு அழைத்து இது குறித்து தகவல் அளித்தார். அந்த நபரை போலீசிடம் ஒப்படைத்தார். அங்கு வந்த காவல் துறையினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், வாலிபர் வட மாநிலத்தை சேர்ந்தவர். திருடும் நோக்கில் வீட்டில் குதித்த அவரை நாயிடம் சிக்கி கடிபட்டதால் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளதாக கூறினர்.
திரைப்படத்தில் வருவது போல் சிப்பிபாறை ரக நாய் திருட வந்த நபரை 2 மணி நேரம் லாக் செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.