திருமகன் முதலில் நாம் தமிழர் கட்சியில்தான் சேர வந்தார்- சீமான் பரபரப்பு பேச்சு
- முதலமைச்சரும் பிரதமரும் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை என சீமான் விமர்சனம்
- ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்றத்திற்கு போனாலும் மக்கள் பிரச்சனைகளை பேசமாட்டார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். இன்று வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
கொடுத்த வாக்குறுதிகளில் 90 விழுக்காட்டை நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்கிறார்கள். 90 வேண்டாம், 9 சதவீதம் நிறைவேற்றியதை சொல்லுங்கள் பார்க்கலாம்.
தமிழக முதலமைச்சர் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. அதேபோல் 10 வருடம் ஆட்சியை நிறைவு செய்ய உள்ள பிரதமர் மோடியும் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. ஏன்? கேள்வி கேட்பார்கள்... அவர்களிடம் பதில் இல்லை. நம்மிடம் கேள்வி கேட்பார்கள். அப்போது நாம் அவர்களிடம் திருப்பி கேள்வி கேட்போம். அவர்களிடம் பதில் இல்லை.
தம்பி திருமகனை எனக்கு ரொம்ப பிடிக்கும். திருமகன் முதலில் நமது கட்சியில்தான் இணைவதற்கு வந்தார். பின்னர் அவரது தந்தை என்ன சொன்னார் என்று தெரியவில்லை. என்னிடம் கேட்டான். நான் அங்கேயே இருந்துவிடு என்று கூறினேன். ஒன்றரை ஆண்டுகாலம் சட்டமன்றத்தில் இருந்தார் திருமகன். எதாவது மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் பேசியதை பார்த்ததுண்டா? அய்யா (இளங்கோவன்) போனாலும் பேசமாட்டார். எனவே மக்களின் பிரச்சனைகளை துணிந்து தெளிந்து பேசக்கூடிய ஒருவரை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.