ஊட்டியில் அரசு கல்லூரியில் சேர்ந்த திருநம்பி- படித்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக பேட்டி
- திருநம்பி ஹரி படிப்பதில் மிகவும் ஆர்வம் உடையவராக இருந்தார்.
- நீலகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கல்லூரிக்கு செல்லும் திருநம்பி ஹரி ஆவார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மசினகுடி அடுத்த உண்டி மாயார் பகுதியை சேர்ந்தவர் ஹரி. திருநம்பியான இவரை குடும்ப சூழ்நிலை காரணமாக அவரது பெற்றோரால் கவனிக்க முடியவில்லை.
இதையடுத்து ஹரியை ஊட்டியை சேர்ந்த வக்கீல் சவுமியா சாசு என்பவர் தத்து எடுத்து வளர்த்து வருகிறார். திருநம்பி ஹரி படிப்பதில் மிகவும் ஆர்வம் உடையவராக இருந்தார். படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருந்தார்.
இதையடுத்து அவர் பள்ளியில் சேர்ந்து படித்தார். பள்ளி படிப்பை முடித்த கையோடு ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், படிக்க விண்ணப்பித்தார். தற்போது அவருக்கு ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், பி.ஏ. பொருளாதாரம் முதலாம் ஆண்டு படிக்க இடம் கிடைத்துள்ளது.
இதையடுத்து அவரும் கல்லூரிக்கு சென்று மற்ற மாணவர்களுடன் இணைந்து படித்து வருகிறார். மற்ற மாணவர்களும் அவருடன் சகஜமாக பழகி வருகின்றனர்.
இதுகுறித்து திருநம்பி ஹரி கூறுகையில், எனக்கு படிப்பில் ஆர்வம் உள்ளது.
ஆர்வம் உள்ளதால் படிக்க விரும்பினேன். தற்போது ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்து வருகிறேன். படித்து முடித்ததும் அரசு பணியில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்வதே எனது லட்சியம் என்றார்.
இதன்மூலம் நீலகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கல்லூரிக்கு செல்லும் திருநம்பி ஹரி ஆவார்.