திண்டுக்கல் கோவிலில் திருநங்கைக்கு தாலிகட்டி திருமணம் செய்த திருநம்பி
- திருநங்கை மாயா, திருநம்பி கணேஷ் ஆகிய இருவரும் அங்குள்ள விநாயகர் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
- தமிழகத்தில் இதுபோன்ற திருமணங்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள தயங்கி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் வேடபட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(21). இவர் ஆணாக பிறந்து திருநங்கையாக மாறி மாயா என்ற பெயரோடு வாழ்ந்து வந்தார். மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி(24). இவர் பெண்ணாக பிறந்து திருநம்பியாக மாறி கணேஷ் என்ற பெயரில் வாழ்ந்து வந்தார்.
இவர்கள் 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தங்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகளோ, அர்ச்சகர்களோ இந்த திருமணத்தை நடத்தி வைக்க முன்வரவில்லை. இதனைதொடர்ந்து திருநங்கை மாயா, திருநம்பி கணேஷ் ஆகிய இருவரும் அங்குள்ள விநாயகர் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
உடன் வந்த திருநங்கைகள் இந்த திருமணத்தை நடத்தி வைத்து அவர்களுக்கு அட்சதை தூவி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அபிராமி அம்மன் கோவிலில் நடந்த இந்த வித்தியாசமான திருமணத்தை கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
இதுகுறித்து திருமணத்தை நடத்தி வைத்த திருநங்கைகள் தெரிவிக்கையில், தன்பாலின ஜோடிகள் சேர்ந்து வாழ உச்சநீதிமன்றமே அனுமதி வழங்கி உள்ளது. இதேபோல் திருநங்கையும், திருநம்பியும் திருமணம் செய்து கொண்டு வாழும் முறையை கேரள உள்ளிட்ட பிறமாநிலங்களில் பொதுமக்கள் மற்றும் சமூகத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற திருமணங்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள தயங்கி வருகின்றனர். சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது போல இதுபோன்ற திருமணங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் மாற வேண்டும். இவர்களும் மனிதர்கள் என்பதை உணர்ந்து இந்த தம்பதிகளுக்கு சமூகம் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
அப்போதுதான் தாழ்வுமனப்பான்மையால் தற்கொலை போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் என்றனர்.