திருவாடானை தொகுதி 37 ஆண்டாக ஒரே குடும்பத்தின் பிடியில் இருந்து வருகிறது- அண்ணாமலை பேச்சு
- பழைய பஸ் நிலையத்தில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்ற அண்ணாமலை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
- காவிரி நதி நீர் பிரச்சினைக்கு இந்த தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எம்.ஏ. ஒரு குரல் கூட கொடுக்கவில்லை.
ஆர்.எஸ்.மங்கலம்:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் கடந்த 28-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்கினார். அன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலை நடைபயணமாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.
3-வது நாளான நேற்று முதுகுளத்தூர் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட அவர் அங்குள்ள தேவர் சிலைக்கும், வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பிரசித்தி பெற்ற திருஉத்திரகோசமங்கை கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.
4-வது நாளான இன்று காலை 11 மணி அளவில் ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்ட அண்ணாமலை ஆர்.எஸ்.மங்கலத்தில் தனது நடைபயணத்தை தொடர்ந்தார். பழைய பஸ் நிலையத்தில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்ற அண்ணாமலை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் விலைவாசி ஏற்றம் குறித்தும், தி.மு.க. அரசின் நடவடிக்கை குறித்தும் சிறப்புரையாற்றினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதி மிகவும் புகழ்பெற்ற தொகுதியாகும். ஆனால் இந்த தொகுதி கடந்த 37 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறது. தாத்தா, மகன், பேரன் என்று தொகுதியை பிடித்து வைத்திருக்கிறார்கள். தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய கண்மாய் இங்குள்ள ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய். 42 மதகுகளை கொண்ட கண்மாயில் மதகுகள் சரியாக இல்லை.
இதனால் விவசாயம் செய்ய முடியவில்லை. இந்த தொகுதியை சேர்ந்தவர்கள் இன்று அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போய் செட்டில் ஆகிவிட்டார்கள். காரணம் இங்கு விவசாயம் செய்து பிழைப்பு நடத்தமுடியவில்லை. அதனை சரிசெய்யும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.
இங்குள்ளவர்கள் பனை மரம் வைத்திருந்தும் ஏழைகளாகவே இருக்கிறார்கள். காரணம் கள் இறக்க அனுமதி வழங்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகள் 5,500 உள்ளன. அதில் மூன்றில் ஒரு பங்கு கடைகளை மூடினாலே பனைமரம் வைதிருப்பவர்களின் வாழ்வு வளமாகும். காவிரி நதி நீர் பிரச்சினைக்கு இந்த தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எம்.ஏ. ஒரு குரல் கூட கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இன்று பிற்பகல் கள்ளிக்குடி ஊராட்சியில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்கிறார். அதன்பின் ஒன்றிய தலைவர் நரசிங்கம் வீட்டில் மதிய உணவை முடித்து கொண்டு திருவாடானையில் நடைபயணம் செல்கிறார்.
இரவு சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மக்களை சந்தித்து பேசுகிறார். வழிநெடுகிலும் பா.ஜனதா கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நடைபயணத்தின்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாநில செயலாளர் கருப்புமுருகானந்தம், மாநில இளைஞரணி செய லாளர் டாக்டர் ராம்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.