மலிவான அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகளுக்கு இந்த காணொளி- மு.க.ஸ்டாலின் பதிவு
- சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. மற்றும் பாம.க. உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
- எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன் என்றார்.
தமிழக சட்டசபை இரண்டாவது நாள் அமர்வு இன்று காலை கூடியது. கேள்வி நேரம் தொடங்கும் முன் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மானிய கோரிக்கையை தவிர்த்துவிட்டு கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்க அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரி எழுதிய காகிதங்களை தூக்கி காண்பித்து இருக்கையை முற்றுகையிட்டதால் சபாநாயகர் அப்பாவு கண்டித்தார்.
அமளியில் ஈடுபட வேண்டாம் என்றும் அமைதியாக இருக்குமாறும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயர் அப்பாவு அறிவுறுத்தினார்.
இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றுமாறு காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. மற்றும் பாம.க. உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் காணொளியுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே, வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர்.
முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு.. எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன்.
அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.