தோவாளை பூ மார்க்கெட்டில் பிச்சி பூ கிலோ ரூ.1250-க்கு விற்பனை
- ஆயுத பூஜையையொட்டி பூக்களை வாங்குவதற்காக வியாபாரிகள் இன்று அதிகளவு தோவாளை பூ மார்க்கெட்டில் குவிந்திருந்தனர்.
- பிச்சி, மல்லிகை, சம்பங்கி பூக்களின் விலை கடுமையான அளவு உயர்ந்து காணப்பட்டது.
ஆரல்வாய்மொழி:
தோவாளை பூ மார்க்கெட்டிற்கு சேலம், ஓசூர், பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்தும் தோவாளை, செண்பகராமன்புதூர், பழவூர், ஆவரைகுளம் பகுதியில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. பண்டிகை காலங்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும்.
நவராத்திரி விழாவையொட்டி கடந்த சில நாட்களாக பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டிருந்த நிலையில் இன்று பிச்சி மல்லிகை, சம்பங்கி பூக்களின் விலை கடுமையான அளவு உயர்ந்துள்ளது.
ஆயுத பூஜையையொட்டி பூக்களை வாங்குவதற்காக வியாபாரிகள் இன்று அதிகளவு தோவாளை பூ மார்க்கெட்டில் குவிந்திருந்தனர். இதனால் காலை முதலே பூ மார்க்கெட் களைகட்டி இருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் பூக்களை வாங்குவதற்கு வந்திருந்தனர்.
இதையடுத்து வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு பூக்களை வாங்கி சென்றனர். இதனால் பிச்சி மல்லிகை சம்பங்கி பூக்களின் விலை கடுமையான அளவு உயர்ந்து காணப்பட்டது. பிச்சிப்பூ கிலோ ரூ.1250க்கும் மல்லிகை ரூ.700, சேலம் அரளி ரூ.350, சம்பங்கி ரூ.400, சிவப்புகேந்தி ரூ. 120, மஞ்சள்கேந்தி ரூ.90க்கு விற்கப்பட்டது.
மரிக்கொழுந்து ரூ.150, கொழுந்து ரூ.140, கோழி பூ ரூ.50, தோவாளை அரளி ரூ.400, வாடாமல்லி ரூ.60, கனகாம்பரம் ரூ.600, முல்லை பூ ரூ.1250, துளசி ரூ. 40, தாமரை பூ ஒன்று ரூ. 12க்கு விற்கப்பட்டது. வடசேரி கோட்டாறு பகுதிகளில் உள்ள பூக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.