திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்
- கொடி மரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமாகி காலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
- ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இத்திருவிழா அடுத்த மாதம் 4-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.
அதிகாலை 3 மணிக்கு கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டு மேளதாளங்கள் முழங்க அதிகாலை 5.15 மணிக்கு கோவில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில் காப்புகட்டிய ஹரிஹரசுப்பிரமணிய பட்டர் கொடியை ஏற்றினார்.
தொடர்ந்து கொடி மரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமாகி காலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் சங்கரலிங்க தம்பி ரான் சுவாமிகள், திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வபாண்டி, கோவில் அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், இணை ஆணையர் ஞானசேகரன், கோவில் பணியாளர்கள், ஏரல் சேர்மன் கோவில் பரம்பரை அக்தர் கருத்தப்பாண்டி நாடார், ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன், திரிசுதந்திரப்பெருமக்கள், செந்தில்முருகன், கவுன்சிலர் ரேவதி கோமதி நாயகம், தேவார சபையினர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்தையொட்டி பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, கனகராஜ் உள்ளிட்ட போலீசார் ஈடுபட்டனர்.
மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருநாளான வருகிற 28-ந் தேதி மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனையும், பின்னர் சுவாமியும், அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.
7-ம் திருவிழா அன்று அதிகாலை 5 மணிக்கு உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் 8.45 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் பிள்ளையன்கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்குப் பின்னர் பின்னர் மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
8-ம் திருநாளான 31-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். பகல் 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் வருகிற 2-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.