திருச்செந்தூரில் இன்று 20 அடி உள்வாங்கிய கடல்- பரபரப்பு
- அதிகாலையில் அவர்கள் திருச்செந்தூர் கடற்கரை மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
- இன்று பிற்பகல் திருச்செந்தூர் கடல் திடீரென உள்வாங்கியது.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.
திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் திருச்செந்தூரில் திரள்வார்கள். பவுர்ணமி தினத்தையொட்டியும் ஏராளமானோர்கள் வருவார்கள். அந்த வகையில் நேற்று பவுர்ணமி தினத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தது. பவுர்ணமி தினத்தையொட்டி நேற்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
அதிகாலையில் அவர்கள் திருச்செந்தூர் கடற்கரை மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலுள் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காட்சியளித்தனர். மேலும் நேற்று குபேர பவுர்ணமியாகும். இதை முன்னிட்டு நேற்று மாலையில் இருந்து இன்று அதிகாலை வரை லட்சக்கணக்கானோர் கோவிலில் நிலா ஒளியில் கடற்கரையில் தங்கினர்.
இன்று காலை அவர்கள் கடற்கரையில் நீராடினர். இன்று பிற்பகல் திருச்செந்தூர் கடல் திடீரென உள்வாங்கியது. சுமார் 20 அடி தூரத்திற்கு தண்ணீர் உள்வாங்கியது. இதனால் அங்கிருந்த பாறைகள் வெளியே தெரிந்தது. அப்போது கடற்கரையில் திரண்டிருந்த பொதுமக்கள் பாறைகளின் மீது ஏறி செல்பி எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் பாதுகாப்பு கருதி அங்கிருந்து செல்ல பொதுமக்களை அறிவுறுத்தினர்.