ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை- மத்திய அரசு வாதம்
- ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
- தமிழக அரசின் பதில் வாதத்துக்காக விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
சென்னை:
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இன்று மத்திய அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாகவும், இதன்மூலம் ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் நடைபெறுவது தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் பதில் வாதத்துக்காக விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டு, திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், அதற்கு தடை விதித்து சட்டம் இயற்ற முடியாது என ஆன்லைன் விளையாட்டு நிறுவன வழக்கறிஞர்கள் வாதாடியது குறிப்பிடத்தக்கது.