தமிழ்நாடு

தக்காளி விலை உச்சத்தை எட்டியது.. ஒரு கிலோ 130 ரூபாய்.. தக்காளிக்கு மாற்றாக புளியை பயன்படுத்தும் மக்கள்

Published On 2023-07-02 02:29 GMT   |   Update On 2023-07-02 02:29 GMT
  • சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 90 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • சில்லறை விலையில் ஒரு கிலோ 130 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை:

நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளி விளையும் பகுதிகளில் நிலவும் வெப்பம் மற்றும் கன மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால்  விலை உயர்ந்துள்ளது.  தமிழகத்தைப் பொருத்தவரை விளைச்சல் குறைந்ததாலும், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததாலும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வந்த தக்காளியின் விலை ஓரிரு நாட்கள் குறைந்திருந்தது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.65-க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதன்பின்னர் தக்காளி வரத்து வெகுவாக குறைந்ததையடுத்து நேற்று முதல் மீண்டும் தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. நேற்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ100-க்கும் விற்கப்பட்டது. இன்று அதைவிட உயர்ந்து உச்சத்தை தொட்டது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தொட்டது.

சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 90 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு கிலோ 130 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

சமையலில் தவிர்க்க முடியாத தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் வழக்கமாக வாங்குவதைவிட குறைந்த அளவே தக்காளியை வாங்கிச் செல்கின்றனர்.

தக்காளி விலை உயர்வால் பெரும்பாலான மக்கள் தக்காளியை சமையலில் குறைக்கத் தொடங்கி உள்ளனர். தக்காளி இல்லாமல் செய்யக்கூடிய உணவு வகைகளை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அதேசமயம், தக்காளிக்கு மாற்றாக புளி மற்றும் எலுமிச்சையை சமையலில் பயன்படுத்தவும் தொடங்கி உள்ளனர். குறிப்பாக சாம்பாரில் தக்காளிக்குப் பதில், புளிப்பு சுவைக்காக புளி அல்லது மாங்காய் சேர்க்கின்றனர். மாங்காய் சேர்ப்பதால் சுவை தனித்துவமாக இருப்பதால் பலரும் இதை விரும்புகின்றனர்.

Tags:    

Similar News