கன்னியாகுமரியில் இன்று அதிகாலை சூரிய உதயம் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
- கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
- கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்ட ராட்சத அலைகளால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் கன்னியாகுமரியில் நேற்று முதல் சீசன் தொடங்கி உள்ளது.
இதனால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சீசன் தொடங்கிய 2-வது நாளான இன்று கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினார்கள். ஆனால் காலை 7 மணி வரை கார்மேகம் சூழ்ந்து வானம் மப்பும் மந்தாரமாக காட்சி அளித்தது. இடையிடையே சாரல் மழை தூறல் விழுந்து கொண்டிருந்தது. 7 மணிக்கு பிறகு தான் மழை மேகம் கலைந்து சூரிய வெளிச்சம் வெளியே தெரிய ஆரம்பித்தது.
இதனால் கன்னியாகுமரி கடற்கரைக்கு சூரிய உதயம் காண வந்த சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அதேபோல கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்ட ராட்சத அலைகளால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.