தமிழ்நாடு

வண்டலூர் பூங்காவில் வாகனத்தில் சென்று சிங்கம், மானை பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்

Published On 2023-10-10 07:08 GMT   |   Update On 2023-10-10 07:08 GMT
  • கடந்த ஒரு வாரத்தில் சுமார் 2600 பேர் லயன் சபாரியில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.
  • இன்னும் இரண்டு வாகனங்கள் கூடுதலாக பெறுவதற்கு டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது.

வண்டலூர்:

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் குடும்பத்துடன் வந்து விலங்குகளை பார்த்து செல்கிறார்கள்.

கொரோனோ காலகட்டத்தில் கடந்த 3 ஆண்டு முன்பு வண்டலூர் பூங்காவில் வாகனத்தில் சென்று சிங்கங்களை பார்வையிடும் லயன் சபாரி வசதி நிறுத்தப்பட்டது. இதன்பின்னர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2-ந்தேதி வாகனத்தில் சென்று சிங்கம் மற்றும் மான்களை பார்வையிடும் லயன் சபாரி மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்காக குளிர்சாதன வசதியுடன் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் ஒரு பஸ்சில் 28 பேர் பயணம் செய்ய முடியும்.

வண்டலூர் பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் லயன்சபாரி தொடங்கப்பட்டு இருப்பதால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. லயன்சபாரி தொடங்கப்பட்ட நாள் அன்று மட்டும் 18 முறை வாகனங்கள் இயக்கப்பட்டு சுமார் 500 பேர் சிங்கம், மான்களை பார்த்து ரசித்து உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் சுமார் 2600 பேர் லயன் சபாரியில் சென்று பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 7-ந்தேதி (சனிக்கிழமை) 25 முறையும், ஞாயிற்றுக்கிழமை 32 முறையும் லயன்சபாரிக்கு வாகனங்கள் சென்று உள்ளன. சனிக்கிழமை சுமார் 650 பேரும், ஞாயிற்றுக்கிழமை 850 பேரும் கண்டுகளித்து உள்ளனர்.

இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறும்போது, வாகனத்தில் சென்று சிங்கம், மான்களை பார்வையிடும் வசதி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. விடுமுறை நாட்களில் லயன்சபாரி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது இரண்டு வாகனங்கள் மட்டுமே லயன் சபாரிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு வாகனங்கள் கூடுதலாக பெறுவதற்கு டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் புதிய 2 குளிர்சாதன வசதியுடைய பஸ்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

Tags:    

Similar News