தமிழ்நாடு

5 பேர் உயிரிழந்த விவகாரம்: த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல்

Published On 2024-10-07 08:58 GMT   |   Update On 2024-10-07 11:32 GMT
  • சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
  • விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த ஐந்து பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நேற்றைய சாகச நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் மெரினாவில் கூடிய மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

"இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன."

"இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News