தமிழ்நாடு

சாத்தான்குளத்தில் மாயமான 2 கல்லூரி மாணவிகள் எங்கே?- தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

Published On 2022-11-30 06:54 GMT   |   Update On 2022-11-30 06:54 GMT
  • கடந்த 23-ந்தேதி மாணவிகள் 2 பேரும் வங்கிக்கு செல்வதாக கூறி சென்றனர்.
  • மாயமான 2 மாணவிகளை தேடும் பணிக்கு சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தை சேர்ந்தவர் அச்சுதன். இவரது மகள் கார்த்திகா (வயது19). இவர் சாத்தான்குளம் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இதே கல்லூரியில் படித்து வருபவர் சாத்தான்குளம் கொழுந்தட்டு மேலத்தெருவை சேர்ந்த ராபர்ட் செல்வன் மகள் எப்சிபா செல்வகுமாரி (20). கடந்த 23-ந்தேதி மாணவிகள் 2 பேரும் வங்கிக்கு செல்வதாக கூறி சென்றனர்.

ஆனால் அவர்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இது தொடர்பாக அச்சுதன் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில் மாணவிகள் மாயமாகி 6 நாட்கள் ஆன பின்னரும் அவர்களை கண்டுபிடித்து தர போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக அவர்களை மீட்டு தர வேண்டும் என கார்த்திகாவின் தந்தை மற்றும் உறவினர்கள் நேற்று நெல்லை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் செய்தனர்.

இதற்கிடையே வருடாந்தர ஆய்வுக்காக நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் சாத்தான்குளம் சென்றார். அப்போது மாயமான மாணவிகள் விவகாரத்தில் விசாரணை எந்த நிலையில் உள்ளது. ஏதேனும் துப்பு கிடைத்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தினார்.

அப்போது சி.சி.டி.வி. காட்சிகள், செல்போன் சிக்னல்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்து வருவதாகவும், இன்னும் சில நாட்களில் மாணவிகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்து விடுவோம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

அப்போது விரைந்து விசாரணை நடத்தி மாணவிகளை உடனடியாக மீட்க வேண்டும் என டி.ஐ.ஜி. அறிவுறுத்தினர்.

இந்நிலையில் மாயமான 2 மாணவிகளை தேடும் பணிக்கு சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசார் தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை கொண்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News