தரமற்ற இருளர் குடியிருப்பு கட்டுமான பணி: அரசு அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம்
- தரமற்று கட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரரை கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- ஊத்துக்காடு ஊராட்சியில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்பு வீடுகளை கட்டிய விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினருக்கு 76 குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதனை நேற்று முன் தினம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது குடியிருப்பு வீடுகள் தரமற்று கட்டப்படுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
அங்கேயே கட்டுமான ஒப்பந்ததாரரை அழைத்து கடுமையாக கண்டித்தார். ஒதுக்கப்பட்ட நிதியில் தரத்துடன் குடியிருப்புகளை கட்டி முடிக்க வேண்டும். இல்லையெனில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.
தரமற்று கட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரரை கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில் ஊத்துக்காடு ஊராட்சியில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்பு வீடுகளை கட்டிய விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
வாலாஜாபாத் ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா, கள ஆய்வாளர் சுந்தரவதனம் ஆகியோரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் ஆர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
கட்டுமானப்பணி செய்து வரும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.