தமிழ்நாடு

ஐந்தருவியில் குறைவாக விழும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

பாவூர்சத்திரம் பகுதியில் நிரம்பாத குளங்கள்: குற்றாலம் அருவிகளுக்கும் நீர்வரத்து குறைந்தது

Published On 2023-11-29 08:17 GMT   |   Update On 2023-11-29 08:17 GMT
  • குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
  • பாவூர்சத்திரத்திற்கு தென்பகுதியில் அமைந்துள்ள குளத்து பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று முதல் போதிய அளவு மழை இல்லாததால் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வரும் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.

கடந்த சில நாட்களாக குற்றால அருவிகளில் இருந்து வரும் தண்ணீர் மூலம் சிற்றாற்று பாசன வசதி பெரும் குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பியதால் தென்காசி, சுந்தரபாண்டியபுரம், மேலப்பாவூர், கீழப்பாவூர், நாகல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பியதால் அந்த குளங்களின் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களில் நெல் நடவு செய்யும் பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

அதேநேரம் பாவூர்சத்திரத்திற்கு தென் பகுதியில் நாட்டார்பட்டி, திப்பணம்பட்டி, ஆவுடையானூர், பண்டாரகுளம் உள்ளிட்ட கிராமங்களை சுற்றிலும் அமைந்துள்ள குளங்கள் நிரம்பாமல் புற்கள் மட்டுமே வளர்ந்து காணப்படுகின்றன.

இதனால் பாவூர்சத்திரத்திற்கு தென்பகுதியில் அமைந்துள்ள குளத்து பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஜம்பு நதியின் மேல்மட்ட கால்வாய் பணிகள் தொடங்கப்பட்ட பொழுதிலும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இருப்பதால் போதிய மழை இருந்தும் தங்கள் பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பாமல் தாங்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் பணிகளை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு நிரம்பாத குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து விவசாயிகளை வாழ வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News