அனுமதியின்றி வைக்கப்பட்ட 247 விளம்பர பலகைகள் அகற்றம்
- 15 மண்டலங்களிலும் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட அனைத்து விளம்பர பலகைகளும் விரைவில் அகற்றி முடிக்கப்படும்.
- உரிமம் இல்லாத விளம்பர பலகை அமைக்க அனுமதித்தால் கட்டிடத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் சென்னை ஐகோர்டின் உத்தரவுப்படி அகற்றப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 21-ந்தேதி முதல் அக்டோபர் 25-ந்தேதி வரை பொது இடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 203 விளம்பர பலகைகள் மற்றும் கடைகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட 44 விளம்பர பலகைகள் என மொத்தம் 247 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.
15 மண்டலங்களிலும் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட அனைத்து விளம்பர பலகைகளும் விரைவில் அகற்றி முடிக்கப்படும். கட்டிட உரிமையாளர்கள் மாநகராட்சியிடம் உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே விளம்பர பலகை வைக்க அனுமதிக்க வேண்டும். உரிமம் இல்லாத விளம்பர பலகை அமைக்க அனுமதித்தால் கட்டிடத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி அனுமதி பெறாத விளம்பர பலகைகளை கட்டிடத்தின் உரிமையாளர்களே தாமாக முன்வந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அகற்றிட அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.