தமிழ்நாடு

உண்மைக்கு புறம்பான தகவல்களை வேலுமணி சொல்லி வருகிறார்- அமைச்சர் எ.வ.வேலு

Published On 2024-08-12 10:50 GMT   |   Update On 2024-08-12 10:50 GMT
  • இப்பாலப்பணிக்கு சுமார் ரூ.318 கோடி நிதி திராவிட மாடல் ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்துள்ளது.
  • கழக ஆட்சியால் பல பணிகள் செய்யப்பட்டுள்ளதை பாராட்ட மனமில்லை என்றாலும், குறை சொல்லாமல் இருந்திருக்கலாம்.

சென்னை:

அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை, உயர்மட்டப்பாலம் அமைக்கும் திட்டம் 2010 ஆம் ஆண்டு கலைஞரால் கருத்துரு உருவாக்கப்பட்டது.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்த மனம் இல்லாமல், ஏழு ஆண்டுகாலம் காலதாமதத்திற்குப் பின் 2.4.2018 அன்று பாலப்பணி தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டது.

7.5.2021 அன்று, திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக ஆட்சிப் பொறுப்பேற்றபோது. 12 சதவீத பாலப்பணிகள் மட்டுமே முடிந்து இருந்தன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்னிடம் அறிவுறுத்தினார்.

என்னுடைய தொடர் நடவடிக்கையின் காரணமாக 88 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டது. இப்பாலப்பணிக்கு சுமார் ரூ.318 கோடி நிதி திராவிட மாடல் ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்துள்ளது.

சாலையைப் பயன்படுத்தக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், காலவிரயத்தைத் தவிர்த்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலமைச்சரால் 9.8.2024 அன்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்த உயர்மட்டப்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. இது குறித்து நாளிதழ்கள் படத்துடனும் பாராட்டியுள்ளதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வேலுமணி, உண்மைக்குப் புறம்பானச் செய்திகளை அளித்துள்ளார்.

"காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்" என்ற முது மொழிக்கேற்ப, கழக ஆட்சியால் பல பணிகள் செய்யப்பட்டுள்ளதை பாராட்ட மனமில்லை என்றாலும், குறை சொல்லாமல் இருந்திருக்கலாம்.

தற்போது, நடைபெற்று வரும் திருச்சி சாலை சுங்கம் பகுதியில், ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணி 31.8.2024க்குள் முடிக்கப்படும். இப்பணி விரைவில் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News