வண்டலூர் பூங்காவில் 3 ஆண்டுக்கு பிறகு சிங்கம், மான்களை வாகனத்தில் சென்று பார்க்கும் வசதி இன்று முதல் தொடக்கம்
- ஏ.சி. பஸ்சில் பார்வையாளர்கள் சென்று சிங்கம், மான்களை பார்வையிடலாம்.
- ஒரு பஸ்சில் ஒரே நேரத்தில் 28 பேர் பயணிக்க முடியும்.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் பூங்காவுக்கு வந்து இதனை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கின்போது கடந்த 3 ஆண்டுக்கு முன்பு பூங்காவில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் "லயன்சபாரி" நிறுத்தப்பட்டது. பின்னர் பூங்கா வழக்கமாக திறந்த பின்னரும் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இதனால் சிங்கங்களை பார்வையிடும் "லயன் சபாரி"யை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து லயன் சபாரியை தொடங்க பூங்கா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் ஏ.சி. பஸ்கள் வாங்கப்பட்டது. மேலும் சிங்கங்கள் உலாவும் பகுதியில் நவீனப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்க்கும் வசதி 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வண்டலூர் பூங்காவில் தொடங்கப்பட்டது. இதனை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பூங்காவில் நடைபெற்ற வனவிலங்கு வார கொண்டாட்டங்கள் நிகழ்ச்சியின்போது தொடங்கி வைத்தார். இதேபோல் மான்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதியும் தொடங்கி வைக்கப்பட்டது. ஏ.சி. பஸ்சில் பார்வையாளர்கள் சென்று சிங்கம், மான்களை பார்வையிடலாம். ஒரு பஸ்சில் ஒரே நேரத்தில் 28 பேர் பயணிக்க முடியும்.
இதேபோல் நுழைவுச் சீட்டில் கியூஆர் கோடு ஸ்கேனர் வசதி, நுழைவுச் சீட்டு வழங்க 2 கவுண்டர்கள், உலக தரம் வாய்ந்த உணவகம், முதுமலை வனத்துறை என்ற இணையதளம், வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாக கட்டப்பட்ட வன உயிரினங்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி ஆகியவையும் தொடங்கி வைக்கப்பட்டது.
வண்டலூர் பூங்காவில் 3 ஆண்டுக்கு பிறகு சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதி செய்யப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். பூங்கா நிர்வாகத்தினரின் ஏற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.