விஜய் கட்சி மாநாடு இடம் மாறுகிறது?
- தனி செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.
- விஜய் கட்சிக்கு பெருகி வரும் ஆதரவுதான் பாரம்பரிய கட்சிகளை மிரள வைத்துள்ளது.
சென்னை:
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என்றும் அறிவித்தார்.
அதன் பிறகு படிப்படியாக ஒவ்வொரு நிகழ்ச்சியின் மூலம் தனது அரசியல் நகர்வுகளை வெளிப்படுத்தி வந்தார்.
கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கி வைத்தார். தனி செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதுவரை சுமார் ஒரு கோடி பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகம் கொடியை அறிமுகப்படுத்திய விஜய் அடுத்த மாதம் கட்சியின் மாநாடு நடைபெறும் என்றும் அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். எனவே தொண்டர்களிடம் மாநாட்டை பற்றிய எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநாட்டு அமைப்பு குழுவினர் தொடங்கினார்கள். இதற்காக நெல்லை, மதுரை, கோவை ஆகிய இடங்களை பார்த்தார்கள். ஆனால் தொண்டர்கள் எளிதில் வருவதற்கு ஏற்ற இடமாக இருக்க வேண்டும் என்று மாவட்ட தலைவர்கள் பலர் வற்புறுத்தினார்கள். இதனால் திருச்சி பொன்மலை கார்னரில் உள்ள ரெயில்வே மைதானத்தை தேர்வு செய்தார்கள்.
அதற்காக அனுமதி கோரி ரெயில்வே நிர்வாகத்துக்கு மனுவும் கொடுத்தார்கள். ஆனால் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் மாற்று இடமாக அங்கேயே சிறுகனூர் என்ற இடத்தை தேர்வு செய்தார்கள். அதுவும் சரிபட்டு வர வில்லை. இதனால் விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியை தேர்வு செய்தார்கள்.
இதற்காக சாலை என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான இடங்களை தேர்வு செய்தார்கள். அந்த இடத்தில் மாநாடு நடத்திக் கொள்ள அவர்களும் ஆரம்பத்தில் சம்மதித்தனர். இதனால் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தொடங்கினார்கள்.
இந்த நிலையில் இடத்தின் உரிமையாளர்கள் இடத்தை வழங்க தயங்குகிறார்கள். அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து மிரட்டுவதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் குற்றம்சாட்டுகிறார்கள்.
விஜய் கட்சிக்கு பெருகி வரும் ஆதரவுதான் பாரம்பரிய கட்சிகளை மிரள வைத்துள்ளது. எனவே மாநாட்டை நடத்த தொடர்ந்து இடையூறு செய்து வருவதாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் உடனே மாற்று இடம் தேவை என்பதால் தஞ்சை, சேலம், திருச்சி பகுதியிலும் வேறு இடங்களை பார்த்து வருவதாக நிர்வாகிகள் கூறினார்கள்.
இடம் உறுதியான பிறகு தான் மாநாடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இதுபற்றி விஜய் கட்சியின் பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
இந்த மாதிரி நெருக்கடிகள் வர தொடங்கியதும் நாங்களும் உஷார் ஆகிவிட்டோம். விக்கிரவாண்டியில் நடத்த முடியாத சூழ்நிலை வந்தால் மாற்று இடத்தையும் தயார் செய்து ரகசியமாக வைத்துள்ளோம். இன்னும் இரண்டு நாட்களில் மாநாடு நடைபெறும் தேதி, இடம் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளி வரும் என்றார்.