தமிழ்நாடு (Tamil Nadu)

மாநாடு சுவர் விளம்பரம் எழுதும் பணி தீவிரம்: தேதிக்காக காத்திருக்கும் விஜய் கட்சி தொண்டர்கள்

Published On 2024-09-16 05:16 GMT   |   Update On 2024-09-16 05:16 GMT
  • மாநாடு தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • தளபதி மாநாடு நடத்துவதற்கு எந்த தேதியை அறிவிக்கிறாரோ அந்த நாள் எங்களுக்கு வெற்றி திருநாள்.

விக்கிரவாண்டி:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இந்த அறிவிப்புக்கு பிறகு கட்சியின் முதல் மாநாட்டை நடத்த நடிகர் விஜய் தீவிரம் காட்டினார்.

இதற்காக முதல் கட்டமாக அவர், கடலூரில் உள்ள பிரபல ஜோதிடர் சந்திரசேகரிடம் கட்சி கொடி மற்றும் மாநாடு நடத்த தேதி ஆகியவை குறித்து கேட்டதாக தெரிகிறது.

அதன்படி, நடிகர் விஜய் கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி, முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கை, கொடியின் விளக்கம், கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து விளக்குவதாக அறிவித்தார். இது விஜய் கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து சேலம், திருச்சி உள்ளிட்ட சில இடங்களில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மாநாடு நடத்துவதற்கான இடத்தை பார்வையிட்டனர்.

இதனால் மாநாடு எங்கு நடைபெறும் என்ற ஆர்வம் மேலோங்கியது. இப்படி இருக்கும் பட்சத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் வருகிற 23-ந் தேதி மாநாடு நடத்துவதற்கு பாதுகாப்பு அளித்திட அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி அக்கட்சியினர் மனு அளித்தனர். இதையடுத்து 21 கேள்விகள் பட்டியலிடப்பட்டு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு கடந்த 2-ந் தேதி விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கடிதம் அனுப்பியிருந்தார்.

தொடர்ந்து போலீசார் கேட்ட 21 கேள்விகளுக்கான பதிலை கடிதமாக புஸ்சி ஆனந்த் கடந்த 6-ந் தேதி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேசிடம் அளித்தார். அதன் பிறகு மாநாட்டுக்கு அனுமதி வழங்கி 33 நிபந்தனைகளுடன் கூடிய கடிதம் ஒன்றை கடந்த 8-ந் தேதி காவல்துறை வழங்கியது.

இதற்கிடையில் முதல் மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த பல்வேறு கெடுபிடி போடப்பட்டதால், அதற்கான பணிகள் தொடங்காமல் உள்ளது. மேலும் 23-ந் தேதி திட்டமிட்டபடி மாநாடு நடைபெறுமா? என்ற சூழல் உருவானது.

இது ஒருபுறம் இருக்க விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஜய் கட்சியினர் சுவர் விளம்பரங்களில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் மாநாட்டிற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என்று தொண்டர்களுக்கு நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதனால் மாநாடு தேதி தள்ளிப்போவது உறுதியானது.

இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் கூறுகையில், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் 27 பேரிடம் மாநாடு நடத்த செப்டம்பர் 23-ந் தேதி வரை ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. மொத்தம் 85 ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக கூறி ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில் ஒப்பந்த காலம் 23-ந் தேதியுடன் முடிவடைவதால், ஒப்பந்த தேதியை நீட்டிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது என்றனர்.

மேலும் நடிகர் விஜய்யின் ஜாதகப்படி மாநாட்டை அக்டோபர் மாதம் 20-ந் தேதி முதல் 27-ந்தே திக்குள் நடத்தலாம் (அதாவது ஐப்பசி முதல் வாரத்தில்) என ஜோதிடர் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீண்டும் கடலூர் ஜோதிடரை இந்த வாரத்தில் சந்திக்க உள்ளதாகவும், அதன் பிறகு மாநாடு தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மாவட்டத் துணைத் தலைவரும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான பனையபுரம் வடிவேல் கூறியதாவது:-

தளபதியின் தமிழக வெற்றி கழக கட்சியின் அரசியல் முதல் மாநாடு எங்களது மாவட்டத்தில் நடத்துவதற்கு இடம் தேர்வு செய்த எங்கள் தளபதிக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்.

எங்கள் தளபதி மாநாடு நடத்துவதற்கு எந்த தேதியை அறிவிக்கிறாரோ அந்த நாள் எங்களுக்கு வெற்றி திருநாள். அன்று மாநாட்டு வெற்றி திருவிழாவை எங்கள் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து வெற்றிகரமாக நடத்தி காட்டுவோம். எங்கள் தளபதியின் உத்தரவுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News