தமிழ்நாடு

மதம், இனத்தை கடந்து வாழும் மனித நேயம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் தன்னார்வலர்கள்

Published On 2023-12-21 09:46 GMT   |   Update On 2023-12-21 10:37 GMT
  • பெரும்பாலான மக்கள் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
  • தூத்துக்குடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, தண்ணீர், பிஸ்கட், பால், பிரட் உள்ளிட்டவைகள் வழங்கும் பணியிலும் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அரசு சார்பில் முகாம்களில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைத்தாலும் அவை மக்களின் வயிறை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்ற நிலை இருந்தது.

பெரும்பாலான மக்கள் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஏரல், கேம்பலாபாத், ஆத்தூர், முக்காணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கோவில்களில் உள்ள ஜெனரேட்டர் வசதிகளை பயன்படுத்தி தங்களது செல்போன்களை சார்ஜ் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காகவும், அரசுக்கு துணை நிற்கும் வகையில் தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு அமைப்புகளும் இணைந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 3 நாட்களாக உணவு தயாரித்து வழங்கும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். அவர்கள் தங்களது செல்போனில் வாட்ஸ்-அப்பில் குழு ஒன்றை தொடங்கி உள்ளனர். அதில் வசதி படைத்த வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். மதம் பாகுபாடு இல்லாமல் கோவில்களிலும், மசூதிகளிலும் தங்கியுள்ள பொதுமக்களுக்கு உதவும் வண்ணம், வேறுபாடுகளை களைந்து மனித நேயத்தின் அடிப்படையில் ஏராளமானவர்கள் தங்களது பங்களிப்பை பணமாகவும், பொருளாகவும் வழங்கி வருகின்றனர்.

அதனை வைத்து தூத்துக்குடி மாவட்ட தன்னார்வலர்கள் காய்கறிகள் வாங்கி சமைத்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் சாலைகள் துண்டிப்பால் கிராமங்களில் இருந்து வெளியே செல்லமுடியாமல் சிக்கி தவிக்கும் மக்களுக்கும் சமையல் செய்து உணவுகளை பொட்டலங்களாக தன்னார்வலர்கள் எடுத்துச்சென்று வழங்கி வருகின்றனர். தினமும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அவர்கள் உணவு வழங்குகின்றனர்.

தூத்துக்குடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தன்னார்வலர்கள் ஒரு மினி லாரி மூலமாக பல கிலோ மீட்டர்கள் சுற்றி நெல்லைக்கு வந்து மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்குகின்றனர். பின்னர் அதனை எடுத்துச்சென்று பொதுவான ஒரு இடத்தில் வைத்து சமைத்து அங்கிருந்து பொட்டலங்களாக எடுத்துச்சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

சென்னை பெருவெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டபோது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமான தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் தங்களால் முடிந்த பொருட்களை நிவாரணமாக வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தென்மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இவை அனைத்தும் தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும், சகோதரத்துவம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை பறைசாற்றும் விதமாகவும் இருந்து வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை எனலாம். 

Tags:    

Similar News