தமிழ்நாடு

வாக்காள பெருமக்களே மறந்தும் இருந்து விடாதீர்கள்... தாரை தப்பட்டை, ஆட்டத்துடன் களைகட்டும் இறுதிக்கட்ட பிரசாரம்

Published On 2024-04-16 07:05 GMT   |   Update On 2024-04-16 07:05 GMT
  • இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே, தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தீவிர பிரசாரம் களைகட்டியது.
  • பெண்கள் வீடுகளில் கட்சி சின்னங்களை கோலமாக வரைந்தும் வேட்பாளர்களை கவருகிறார்கள்.

வாக்காள பெருமக்களே.. மறந்தும் இருந்து விடாதீர்கள்... என்ற வாகன பிரசாரம் வீடுகளுக்குள் இருந்தாலும் தற்போது காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த அளவுக்கு இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே, தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தீவிர பிரசாரம் களைகட்டியது.

தி.மு.க. தலைமையிலான இண்டியா கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுவதால், தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் கட்சியினருக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர்களும் வரிந்து கட்டிக்கொண்டு பிரசாரம் செய்கின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் வேட்பாளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால், திரும்பிய பக்கமெல்லாம் வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் காணப்பட்டனர். மேள தாளங்கள் அடித்தப்படி ஊர்வலமாக சென்றனர்.

பிரசார வாகனங்களில் கட்சிகளின் தொண்டர்களும் தங்கள் கட்சிக் கொடிகளை அசைத்து, நடனமாடினர்.

பாடல்கள் ஒலிபரப்பிக்கொண்டு ஆட்டோ முன் செல்ல, வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர். அவர்களுடன் தொண்டர்கள் கையில் பதாதைகளை ஏந்தி நடனமாடிக் கொண்டே பின்தொடர்ந்து சென்றனர்.

குறிப்பாக மலைக் கிராமங்கள், சாலை வசதியற்ற மற்றும் நீண்ட தொலைவில் உள்ள குக்கிராமங்களுக்கு வேட்பாளர்கள் சென்று குக்கிராமங்களிலும், வேட்பாளர்கள் வராத பகுதிகளிலும் வாக்காளர்களை கவரும் வகையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஈடுபட்டனர்.

எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் தலைகளாக காட்சி அளிக்கிறது. இதே போல் அரசியல் கட்சி தொண்டர்கள் தலைவர்கள் போல் வேடம் அணிந்து பிரசாரத்தில் ஈடுபட்டு அவர்கள் போல் பேசி பொதுமக்களை கவர்ந்தனர்.

பெரியார் போல் வேடம் அணிந்து வருபவர்கள் சுய மரியாதை, பெண் விடுதலை குறித்தும் கருணாநிதி போல் வருபவர்கள் அவரது வசனம் மற்றும் கொள்கைகள் குறித்தும் பேசினர்.

மேலும் எம்.ஜி.ஆர். போல் வேடம் அணிந்து வருபவர்கள் அவரது கொள்கைகள் குறித்தும் மற்றும் எம்.ஜி.ஆர். பாடிய பாடல்களை பாடி அவர் போல் நடித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் வருகிறது. மேலும் மேள தாளங்கள் முழங்க சினிமா பாடல்கள், அரசியல் கட்சி பாடல்கள் மூலம் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்தினர்.

தொண்டர்கள் கட்சி சின்னங்களை உடலில் வரைந்து ஓட்டு கேட்டனர்.

சைக்கிள், இருசக்கர வாகனங்களில் கட்சி சின்னங்களை வைத்து கொண்டு பல பகுதிகளில் சுற்றினர்.

பெண்கள் வீடுகளில் கட்சி சின்னங்களை கோலமாக வரைந்தும் வேட்பாளர்களை கவருகிறார்கள்.

வேலூரில் சிலர் கரகாட்டம் ஆடுபவர்களை அழைத்து வந்தனர். அவர்கள் வீதி வீதியாக சென்று வாக்காளர்களை கவரும் வகையில் கரகாட்டம் ஆடினர். மோகினி ஆட்டம், கதகளி ஆட்டமும் நடந்தது.

இதை பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பார்த்து ரசித்தனர்.

இறுதிகட்ட பிரசாரத்தில் எங்கு பார்த்தாலும் தாரைதப்பட்டை ஆட்டம் என திருவிழா போல் காட்சி அளித்தது.

Tags:    

Similar News