கோவை தொகுதியில் வாக்காளர்கள் நீக்கம் தி.மு.க.வின் விஞ்ஞான முறைகேடு என பா.ஜ.க. குற்றச்சாட்டு
- 823 ஓட்டுக்கள் நீக்கப்பட்டிருந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டுப் போட முடியவில்லை.
- தி.மு.க. தற்போது நல்ல ஓட்டுகளை முறைகேடு செய்து தமிழகம் முழுக்க ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறது.
கோவை:
கோவை பாராளுமன்ற தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் வாக்களிக்கச் சென்ற பலர் ஏமாற்றத்துக்கு ஆளானதாகவும் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி விளக்கம் அளித்திருந்தார்.
ஆனால் கலெக்டரிடம் விளக்கம் திருப்தி அளிப்பதாக இல்லை என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க. விவசாயிகள் பிரிவு மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் கூறியிருப்பதாவது:-
கோவை பாராளுமன்ற தொகுதி கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி எண் 214 அங்கப்பா பள்ளியில் 823 ஓட்டுக்கள் நீக்கப்பட்டிருந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டுப் போட முடியவில்லை.
அவர்கள் அனைவரும் 30 ஆண்டுகளாக ஓட்டளித்து வருபவர்கள். சொந்த வீட்டில் வசிப்பவர்கள். நல்லாட்சியை விரும்பி ஓட்டளிக்க கூடிய ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
அதேபோல் தெப்பக்குளம் பகுதி வாக்குச்சாவடி எண் 158-ல் 40 ஓட்டுகளும், 157-ல் 45 ஓட்டுகளும், 156-ல் 20 ஓட்டுகளும், 155-ல் 40 ஓட்டுகளும், 154-ல் 30 ஓட்டுகளும், 153-ல் 25 ஓட்டுகளும் என 200 ஓட்டுகள் நீக்கப்பட்டிருந்தன.
இவர்கள் அனைவரும் வடமாநிலத்தவர்கள். பிரதமர் மோடிக்கு ஆதரவாக ஓட்டளிப்பவர்கள். இப்படி கோவையில் மட்டும் 5 சதவீத ஓட்டுகள். அதாவது 21 லட்சம் ஓட்டுகளில் ஏறக்குறைய 1 லட்சம் ஓட்டுகள் எந்த முன்னறிவிப்போ, கள விசாரணையோ இன்றி கலெக்டரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தேர்தல் பிரிவு பணியாளர்கள் பெயர்களை நீக்கி உள்ளனர்.
இதுதொடர்பாக கலெக்டரை நேரடியாக சந்திக்க அவரது அலுவலகத்துக்கு சென்றோம். அங்கு அவர் இல்லை. போனில் தொடர்பு கொண்டோம். சேலஞ்ச் ஓட்டு போட சட்டத்தில் இடமில்லை என்று கூறினார்.
அங்கப்பா மேல்நிலைப்பள்ளியில் 1,353 ஓட்டுகள் இருந்த நிலையில் 823 ஓட்டுகள் குறைந்தபோது விழித்திருக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் மவுனம் காத்து தி.மு.க.வின் விஞ்ஞான முறைகேட்டுக்கு துணை போய் இருக்கிறது.
கலெக்டர் உரிய நடை முறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது என்கிறார். ஆனால் வாக்குச்சாவடி எண் 214-ல் ஓட்டுகள் மறுக்கப்பட்டது வாக்காளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. கலெக்டர் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.
இதுசம்பந்தமாக மனு கொடுத்தோம். அப்போதும் வக்கீல்களை நீண்ட நேரம் காக்க வைத்து தேர்தல் முடிந்தபின்பே மனுவை பெற்றுக் கொண்டார். இது தி.மு.க.வின் முறைகேட்டிற்கு மாவட்ட நிர்வாகம் துணை போவதை காட்டு கிறது.
தி.மு.க. தற்போது நல்ல ஓட்டுகளை முறைகேடு செய்து தமிழகம் முழுக்க ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறது. இதை இத்துடன் பா.ஜ.க. விடாது. ஜனநாயக ரீதியில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.