பில்லூர் அணையிலிருந்து 14 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு- பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
- ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.
- மழையால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு ஆகிய இரு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் மொத்த கொள்ளளவு 100 அடியாகும். இந்த அணைக்கு நீலகிரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழைநீர் முக்கிய நீராதாரமாக உள்ளது.
தற்போது நீலகிரி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைக்கான நீர்வரத்து நேற்று நள்ளிரவு அதிகரித்தது. இதனால் அதிகாலை 4 மணியளவில் பில்லூர் அணையில் இருந்து ஓராண்டுக்கு பிறகு 4 மதகுகள் வழியாக சுமார் 14 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் 5 மணிக்கு நீர்வரத்து சற்று குறைந்ததால் 9 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 5.30 மணிக்கு மீண்டும் 12 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. காலை 6 மணி நிலவரப்படி 14,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனையொட்டி நெல்லித்துறை பத்திரகாளி அம்மன் கோவில், ஓடந்துறை, வச்சினம்பாளையம், ஆலாங்கொம்பு, சிறுமுகை, ஜடையம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் கரையோரத்தில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையிலுள்ள பவானி ஆற்றுப்பாலத்தில் மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், நகராட்சி தலைவர் பர்வீன், கமிஷனர் அமுதா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
சோலையார் அணை 100 அடியை எட்டியது வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு ஆகிய இரு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வால்பாறை பகுதியில் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான சோலையார் அணை 5 டி.எம்.சி. தண்ணீர் சேகரிக்கும் அணையாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சோலையார் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 20 அடி நீர்மட்டம் உயர்ந்தது. தற்போது அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்துள்ளது.
வால்பாறை 72 மில்லி மீட்டர் மழை அளவும், சின்கோனா 64 மில்லி மீட்டர் மழை அளவும், சோலையாறு அணை 47 மில்லி மீட்டர் மழை அளவும், அதிகபட்சமாக சின்னக்கல்லார் 92 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவானது.