வயநாடு நிலச்சரிவு: "தேசிய பேரிடர்" எனும் அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும்- அன்பில் மகேஷ்
- முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
- மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு கேரள சகோதரர்களுக்கு துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.
கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.
இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டு எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பேரிடர் தமிழர்களின் மனங்களை உலுக்கியிருக்கிறது. பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கேரள மாநில மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தும் "தேசிய பேரிடர்" எனும் அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு கேரள சகோதரர்களுக்கு துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.