தே.மு.தி.க.வின் பலத்தை ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றியின் மூலம் உலகுக்கு பறைசாற்றுவோம்- பிரேமலதா விஜயகாந்த்
- இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா? அல்லது பணநாயகமா? அது எப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
- தமிழகத்தில் பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் பேனா போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? என்று தெரியவில்லை.
திருச்சி:
விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி டி.கரிகாலன்-தே.மு.தி.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் கொ.தங்கமணி இல்ல திருமண விழா இன்று திருச்சியில் நடந்தது.
விழாவில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் முதன்முதலாக வேட்பாளரை தே.மு.தி.க. களம் இறக்கியது. அவரும் கழக உறுப்பினர்களுடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். மக்கள் மத்தியில் அவருக்கு அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.
அவரை பார்க்கும் போது விஜயகாந்தை பார்ப்பது போல் மக்கள் எண்ணுகிறார்கள். அதனால் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தே.மு.தி.க.வின் பலம் குறையவில்லை என்பதை இந்த ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் சொல்லும்.
இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா? அல்லது பணநாயகமா? அது எப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். எழுதாத பேனாவுக்கு நினைவு சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது. அதுவும் கடலில் வைப்பது என்பது தேவையில்லாதது.
தே.மு.தி.க. பல தேர்தல்களை தனித்து களம் கண்டிருக்கிறது. எங்களது கட்சியை யாரும் பின் நின்று இயக்கவில்லை. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மட்டுமே இயக்குகின்றார். தமிழகத்தில் பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் பேனா போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? என்று தெரியவில்லை.
பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியா? கூட்டணியா என்பதை அந்த நேரத்தில் அறிவிப்போம். தே.மு.தி.க.வுடன் ஒத்துப்போகும் பல கட்சிகள் இருக்கின்றன. ஆகவே தான் 2011-ல் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்தது. பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்துவிட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீங்கள் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, இது குறித்து பொதுக்குழு கூடி முடிவு செய்யும், உரிய நேரத்தில் விஜயகாந்த் அதனை அறிவிப்பார் என்றார்.
முன்னதாக திருமண விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது, மணமக்கள் தங்களது பெற்றோரை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு விட்டுக் கொடுத்து 16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன். எனக்கும் கேப்டனுக்கும் சீர்திருத்த திருமணத்தினை கலைஞர் கருணாநிதி-மூப்பனார் ஆகியோர் நடத்தி வைத்தார்கள்.
ஒட்டு மொத்த பேரும் நல்லவர் என கேப்டன் ஒருவரை மட்டுமே சொல்வதை இந்த உலகம் அறியும். கடவுள் அருளால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தே.மு.தி.க. வெற்றி பெறும். அந்த வெற்றியின் மூலம் மீண்டும் இயக்கம் விஸ்வரூப வெற்றியை அடையும் என்றார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் டிவி கணேஷ், சன்னாசிப்பட்டி பாரதிதாசன், குமார், பகுதி செயலாளர் என் எஸ் எம் மணிகண்டன், சாதிக் மற்றும் பலர் உடன் இருந்தனர்.